எங்களுடைய பிள்ளைகளை எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதை கூறுங்கள் – ஜெயவனிதா

Screenshot 2021 11 17 12 50 17 99 99c04817c0de5652397fc8b56c3b3817
Screenshot 2021 11 17 12 50 17 99 99c04817c0de5652397fc8b56c3b3817

எங்களுடைய போராட்டத்தை நீர்த்து போக செய்வதற்காகவே காணாமல் போனவர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக வவுனியாவில் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நஸ்ட ஈடு வழங்குவதற்காக வரவு செலவு திட்டத்தில் 300 மில்லியன் ரூபாய் அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நாங்கள் இன்று 1738  ஆவது நாளாக போராடி கொண்டிருக்கின்றோம். எங்களுடைய போராட்டத்தை நீர்த்து போக செய்வதற்காக நாடாளுமன்ற வரவு செலவு திட்டத்திலே, காணாமல் போனவர்களுக்கு நிதி ஒதுக்கியிருப்பதாக கூறப்பட்டது.

நிதி ஒதுக்கியிருப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம். எந்த ஒரு தாயும் இந்த நிதியை வேண்டுவதற்கு தயாராக இல்லை. ஏனென்றால் நாங்கள் இந்த போராட்டத்தில் உண்மையான ஆதாரங்களுடன் , கண்கண்ட சாட்சியங்களுடன் தான் போராடி கொண்டிருக்கின்றோம்.

எங்களுடைய போராட்டத்திற்கும், எங்களுடைய பிள்ளைகளை எங்கே கொண்டு சென்று வைத்திருக்கிறார்கள் என்பதனை கூற வேண்டும். எங்களுக்கு நிதியை தந்து ஏமாற்ற வேண்டாம். நாங்கள் நிதியை வேண்டுமளவிற்கும் இல்லை.

எந்தவொரு தாயும் இந்த நிதியை வேண்டுவதற்கு தயாராக இல்லை. இந்த விடயத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.