இலங்கையின் பொருளாதார பிரச்சினை எந்த மார்க்கத்தின் ஊடாக தீர்க்க முயற்சிக்கப்படுகிறது? – ரணில்

Ranil 800x466 1
Ranil 800x466 1

இலங்கையின் பொருளாதார பிரச்சினையானது எந்த மார்க்கத்தின் ஊடாக தீர்க்க முயற்சிக்கப்படுகிறது என்பது தொடர்பாக அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றில் வைத்து தெரிவித்தார்.

சபையில் இன்று சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பிய அவர், மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சாங் சூகிக்கு அந்த நாட்டின் நீதிமன்றம் 4 ஆண்டுகால சிறை தண்டனை விதித்துள்ள நிலையில், அது தொடர்பாக அரசாங்கம் தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அதேநேரம், இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கங்கள் தொடர்பான உண்மையான கணக்குகளை சபையில் முன்வைக்குமாறு தாம் கோரிய போதும், இரண்டு வாரங்களாக அது முன்வைக்கப்படாதுள்ளது என்று ரணில் கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்துக்கும், இந்தியாவிற்கும் இந்தத் தகவல்கள் வழங்கப்படுகின்ற போதும், நாடாளுமன்றில் அது முன்வைக்கப்படாதுள்ளமை ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பாதீட்டின் விவாதம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற போது, நிதி அமைச்சர் எதற்காக இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டார் என்றும் விளக்கமளிக்குமாறும் அரச தரப்பிடம் ரணில் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, எமக்கு எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் விஜயம் செய்து பேச்சுவார்த்தை நடத்த உரிமை இருப்பதாக தெரிவித்ததுடன், கடந்த அரசாங்க காலத்தில் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதன்போது எழுந்த ரணில் விக்ரமசிங்க, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ எந்த காரணத்துக்காக இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டார்? என்பதை விளக்கமாக சொல்லும்படி கேட்டுக்கொண்டார்.

அத்துடன் நாட்டின் பொருளாதார பிரச்சினையை தீர்ப்பதற்கு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலினால் வழிகாட்டிகள் அண்மையில் வெளியாக்கப்பட்டன.

அந்த வழிகாட்டியின் ஊடாகவா? அல்லது வேறு ஏதேனும் மார்க்கம் ஊடாகவா இந்த பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று விளக்கமளிக்குமாறும் ரணில் விக்ரமசிங்க கோரினார்.

இதற்கு பதில் வழங்கிய இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுமே தங்களது தலைவர்கள் என்றும், அவர்களின் சிந்தனை ஊடாகவே பொருளாதார பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, இடையில் எழுந்து கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த ஹேரத் இன்று சபையில் முக்கிய கேள்வியை எழுப்பியமைக்கு ரணில் விக்ரமசிங்கவிற்கு நன்றி தெரிவிப்பதாகவும், இவ்வாறான பெறுமதிக்க கேள்விகளை எழுப்புதற்கு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு இதுவரையில் முடிந்திருக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது எழுந்த ரணில் விக்ரமசிங்க, தாம் எதிர்கட்சித் தரப்பைச் சேர்ந்தவர் இல்லை என்றும் அவர்களுக்காக உரையாற்றவில்லை என்றும் தெரிவித்ததோடு, தற்போது எதிர்கட்சி உறுப்பினர்கள் சபை அமர்வை புறக்கணித்துள்ள நிலையில், அவர்கள் கோருகின்றபடி நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினர்களது பெயர்களை அறிவிக்குமாறும், இந்த பிரச்சினையை தீர்த்து எதிரணி உறுப்பினர்களை நாடாளுமன்ற அமர்வில் கலந்துக் கொள்ளச் செய்யுமாறும் சபாநாயகரை கோரினார்.

அதேநேரம், கப்ராலின் வழிகாட்டல் அன்றி, ஜனாதிபதியின் கொள்கை அடிப்படையிலேயே அரசாங்கம் பொருளாதார பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள விரும்புவதாக தமக்கு அரச தரப்பு தெளிவுப்படுத்தியுள்ளதால், அதன் அடிப்படையிலேயே விவாதத்தை தொடர்வோம் என்றும் ரணில் குறிப்பிட்டார்.

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தூக்கத்தில் கனவு கண்டு எழுந்து வந்ததைப் போல உரையாற்றுவதாகவும், நாடாளுமன்ற விதிகளின் படி அவருக்கு இவ்வளவு நேரம் உரையாற்ற நேரம் வழங்கியது தவறு என்றும் கூறினார்.

மேலும், ஆங்சாங் சூகிக்கு அந்த நாட்டின் நீதிமன்றமே தண்டனை வழங்கி இருப்பதாகவும், அதன் பின்னணி குறித்து ஆராயாமல் எதுவும் தெரிவிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

இதன்போது எழுந்த ரணில் விக்ரமசிங்க, ஆங்சாங் சூகி கடந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றிருந்த போதும், ஆட்சி அமைப்பதற்கு முன்னதாகவே இராணுவ ஆட்சியாளர்கள் ஆட்சியை கைப்பற்றினார்கள் என்பதாலும், அவருக்கு தண்டனை வழங்கியது இராணுவ ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்ட நீதிமன்றமே தண்டனை வழங்கியுள்ளது என்பதாலும், இந்த விடயத்தை அரசாங்கம் கருத்தில்கொள்ள வேண்டும் என்று கோரினார்.

அதேநேரம் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்த விவாதம் கட்டாயமானது என்றும், நாட்டு மக்களுக்கு தற்போது நாடாளுமன்றின் அனைத்து உறுப்பினர்கள் மீதும் வெறுப்பு ஏற்பட்டிருப்பதாக கூற முற்பட்டார்.

இதன்போது தம்மை யாரும் வெறுக்கவில்லை என்று வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

எனவே வாசுதேவ நாணயக்காரவைத் தவிர ஏனைய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மக்கள் வெறுத்திருப்பதாகவும், மக்களுக்கு தீர்வை வழங்க வேண்டியது முக்கியமானது என்றும் கூறினார்.

தாம் வெளிநாடொன்றுக்கு சென்று திரும்பியதாகவும், தற்போது எதிரணியின் நாடாளுமன்ற அமர்வை புறக்கணித்துள்ள விடயம் குறித்து தெளிவுப்படுத்தவே தாம் நாடாளுமன்றம் வந்ததாகவும் ரணில் குறிப்பிட்டார்.

இதேவேளை, அமைச்சர் பந்துல குணவர்தன உரையாற்றும் போது, 2015ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து 7 பில்லியனுக்கும் அதிகமான ஒதுக்கம் இல்லாது செய்யப்பட்டு, டொலர்கள் சந்தையில் சுட்டெரிக்கப்பட்டதுடன் அந்தகாலத்தில் நிதி அமைச்சராக இருந்தவர், ரணில் விக்ரமசிங்கவிற்கு மறைத்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

இதற்கு பதில் வழங்கிய ரணில் விக்ரமசிங்க தமது கட்சி ஆட்சியில் இருந்த 2015ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலத்தில் இருந்த 7 பில்லியனுக்கும் அதிகமான டொலர்கள், கடன்மீளச் செலுத்தலுக்காக பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தமது அரசாங்க காலத்தில் தொழில்வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டு, வீட்டினதும், சமையல் அறையினதும் பாதுகாப்பை உறுதி செய்ததாக கூறிய ரணில் விக்ரமசிங்க, அப்போது 3 வேளையும் மக்கள் உண்பதற்கு வழிசெய்திருந்த போதும், தற்போது நிலைமை மாறி இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

இதேவேளை சபையில் உரையாற்றிய அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, தமக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தொலைபேசியில் அழைத்ததாகவும், ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றுக்கு வந்தமையால், தமது எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிபோய்விடும் என்ற அச்சத்தில் சஜித் பிரேமதாச இருப்பதாக கூறியதாகவும் தெரிவித்து அமர்ந்தார்.

இதன்போது, தாம் எதிரணி உறுப்பினர் இல்லை என்று கூறிய ரணில் விக்ரமசிங்க, குழுநிலை விவாதத்தின் இறுதி நாளன்றேனும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் சபையில் இருக்க வேண்டும் என்பதால், அவர்கள் கோருகின்றபடி நாடாளுமன்ற குழுவின் உறுப்பினர்களை பெயரிடுமாறும் கோரினார்.