ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்கு அப்பால் இராணுவ ஆட்சியா? நாடாளுமன்றில் ஸ்ரீதரன் கேள்வி!

1598004640 sri dug 2
1598004640 sri dug 2

ரணில் விக்கிரமசிங்க தன்னை நியாயமுள்ளவராக அடையாளப்படுத்தி செயற்பட்டால், அவர் சிறந்த ஜனாதிபதியாக இருப்பார் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அவர், தமிழர்களுடைய இனப்பிரச்சினை தீர்வில் முழுமையாக ஈடுபட்டால், நாடு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கொள்கை விளக்க உரையை ஆற்றிக்கொண்டிருக்கும்போது, படையினரால் கிளிநொச்சி மாவட்டத்தில் கட்டுமீறிய அடக்குமுறைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி, கண்டாவளையில் அமைந்துள்ள பாற்கடற்பூங்கா, மயூரன் ஆகிய முன்பள்ளிகள் அண்மையில் படையினரால் வீரமுத்துக்கள் முன்பள்ளிகள் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் இந்த முன்பள்ளிகளுக்கு இராணுவ இலட்சினைகளுடன் பெயர் பலகைகளும் பொருத்தப்பட்டுள்ளன என்று ஸ்ரீதரன் குறிப்பிட்டார்.

இந்த முன்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இராணுவத்தின் சிவில் பிரிவின் பெயர் பொறிக்கப்பட்ட ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன.

வடக்கில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தில் 481 பேர் முன்பள்ளி ஆசிரியர்கள் படையினரின் சிவில் படைப்பிரிவின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு அவர்களுக்கு படையினராலேயே வேதனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் ஆரம்பக்கல்வியை இராணுவ மயப்படுத்தப்படுவது இலங்கையில் இன ஒடுக்குமுறைக்கு ஒரு உதாரணம் என்றும் ஸ்ரீதரன் குறிப்பிட்டார்.

எனவே ரணில் விக்கிரமசிங்க, நியாயமான ஒருவராக இருந்தால், அவர் இவ்வாறான பிரச்சினைகள் உட்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுக்காணவேண்டும்.

இல்லையென்றால் இராணுவத்துக்கு பயந்தே நாட்டில் ஆட்சி நடத்தப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கும்.

அத்துடன் அரசாங்கத்துக்கு புறம்பாக நாட்டில் இராணுவ ஆட்சி இடம்பெறுகிறது என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.