இலங்கைக்கான பயணத்தை தொடர்கிறது சீன கப்பல் – இந்திய ஊடகம்

download 9
download 9

சீனாவின் யுவான் வேங் – 5 கப்பலின் வருகையை பிற்போடுமாறு இலங்கை கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அந்தக் கப்பல் இலங்கையை நோக்கிப் பயணித்துக்கொண்டிருப்பதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு வரவுள்ள குறித்த கப்பல், இந்தோனேஷிய மேற்கு கடற்பரப்பில், மணிக்கு 26 கிலோமீற்றர் வேகத்தில் இலங்கையை நோக்கிப் பயணித்துக்கொண்டிருப்பதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கப்பல், நாளை முற்பகல் 10 மணிக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய உள்ளதாகவும் இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

‘யுவான் வாங்-5 என்ற சீனாவின் விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு ஆய்வுக் கப்பல், ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதற்கான, இலங்கையின் இராஜதந்திர அனுமதி, கடந்த மாதம் 12 ஆம் கொழும்பில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகத்திற்கு, வெளிவிவகார அமைச்சால் வழங்கப்பட்டது.

நாளைய தினம் முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை முறைமுகத்தில் தரித்திருப்பதற்கும் முன்னதாக அனுமதி வழங்கப்பட்டது.

எனினும் பாதுகாப்பு உள்ளிட்ட காரணிகளை சுட்டிக்காட்டிய இந்தியாவின் கடும் அதிருப்தியின் காரணமாக, இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, கொழும்பில் உள்ள சீன தூதரகத்திற்கு அனுப்பி வைத்திருந்த செய்திக் குறிப்பில், மேலும் ஆலோசனை செய்யப்படும் வரை யுவான் வாங் 5 கப்பல், ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதை ஒத்திவைக்குமாறு கோரியிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையேயான தொடர்பு சுதந்திரமானதே தவிர, மூன்றாம் தரப்பினரை இலக்கு வைத்தது அலல என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா தமது பாதுகாப்பு தொடர்பாக இலங்கைக்கு தெரிவித்துள்ள விடயம் அறிவுப்பூர்வமற்றது. விஞ்ஞான ரீதியான இந்த ஆய்வுகள், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான விடயம் மாத்திரமே ஆகும்.

இந்து சமுத்திரத்தில் முன்னரும் சீனா உட்பட பல கப்பல்கள் இவ்வாறான விஞ்ஞான ரீதியான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன.

இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையிலான வழமையான பரிமாற்றங்கள் பாதிக்கப்படுவதை நிறுத்தவும், விஞ்ஞான ரீதியான ஆய்வினை நியாயமானதும், விவேகமானதுமான முறையில் மேற்கொள்ளவும் உரிய  தரப்பினை அறிவுறுத்தியதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார்.

தங்களது ஆய்வு கப்பல் இலங்கையில் நங்கூரமிடுதல் ‘மூன்றாம் தரப்பை இலக்கு வைத்தது அல்ல’ என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.