கொடுமையான ஒரு சட்டத்தை தற்போது கொண்டு வர முற்படுகிறார்கள். அதனை நாங்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடக பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்.
வடக்கு – கிழக்கு ரீதியில் நாளையதினம் இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி வவுனியாவில் துண்டுபிரசுரம் வழங்கும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
எங்கள் மீது திணிப்பதற்காக கொண்டு வரப்பட்டிருக்கின்ற பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மிகக் கொடூரமான ஒரு சட்ட மூலத்தை எதிர்த்தும், கடந்த காலத்திலே எம்முடைய இனம் இதற்காக முகம் கொடுத்து எங்களுடைய பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வகை, தொகையின்றி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டதும், காணாமல் ஆக்கப்பட்டதும், சிறைகளிலே கொல்லப்பட்டதும், இன்றும் சிறைகளிலே வாடி வருவதற்கும், எங்களுடைய மக்களுடைய அன்றாட வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்படுவதற்கும் காரணமாக இருந்த பயங்கரவாத தடைச்சட்டம் அதை நீக்குமாறு நாங்கள் பல தரப்புகளிடம் போராடிய போது இன்று சர்வதேச மட்டத்திலே பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குமாறு அழுத்தம் இலங்கை அரசாங்கத்துக்கு பிரயோகிக்கப்படுகிறது.
அதற்கு பதிலாக ஒரு சட்டத்தை கொண்டு வருகிறோம் என்று அதைவிட மிகக் கொடுமையான ஒரு சட்டத்தை இப்பொழுது கொண்டு வர முற்படுகிறார்கள். அதை நாங்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்ற அடிப்படையிலே, இன்று இந்த போராட்டத்தை நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம்.
நாளைய தினம் ஒரு முழு கடையடைப்பு எங்களுடைய தாயக பிரதேசத்திலே மேற்கொள்ளப்பட வேண்டும். தொழில் முடக்கம், செய்யப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய பிரதான நோக்கம்.
அதற்கு அடுத்ததாக எங்களுடைய சுய நிர்ணய உரிமையை அழித்து ஒழிக்கின்ற, எங்களுடைய குடிப்பரம்பலை சிதைக்கின்ற, தமிழினம் இந்த நாட்டிலே தொன்மையான இனம் என்ற வரலாற்றை அழித்தொழிக்கின்ற நடவடிக்கையாக அரசாங்கம் திட்டமிட்டு முன்னெடுத்து வருகின்ற எங்களுடைய தமிழின தொன்மை தொல்லியல் ஆவணங்களை சிதைக்கின்ற குறிப்பாக சிவாலயங்களையும் மற்றும் சைவ ஆலயங்களையும் சிதைப்பதன் மூலம் எங்களுடைய தொல்லியல் அல்லது எங்களுடைய தொன்மையான இருப்புக்கான ஆதாரங்களை அழித்தொழிக்க முடியும் என்ற நடவடிக்கையிலே அவர்கள் இறங்கியிருக்கிறார்கள். இதை எதிர்த்து கதவடைப்பு போராட்டத்தை கோரி நிற்கின்றோம்.
இது முடிவல்ல அரசியல் கட்சிகள், சமய அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், மாணவர் அமைப்புக்கள் என அனைவரும் ஒன்றுதிரண்டு, இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டத்தை எங்களுடைய தாயக பிரதேசத்திலே முன்னெடுப்பதாக சங்கர்ப்பம் பூண்டுள்ளோம்
முதல் கட்டமாக இந்த கதவடைப்பு, அல்லது ஹர்த்தால் அல்லது தொழில் முடக்கம், சேவை முடக்கம் என்ற இந்த போராட்டத்தை நாளைய தினம் நடத்த இருக்கிறோம். இதனை வெற்றிகரமாக அமைவதற்கு உங்கள் அனைவருடைய ஆதரவையும் ஊடகங்களின் ஊடாக கோரி நிற்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.