யாழ்., தையிட்டி படை முகாம் பகுதிக்குள் சட்டவிரேதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அழைப்பில் இடம்பெற்ற தொடர் போராட்டத்தைக் கலைக்க நேற்றிரவு காவற்துறையினர் நடவடிக்கைகளில் இறங்கியதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பலர் விரட்டியடிக்கப்பட்டனர். எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் ந.சட்டத்தரணி காண்டீபன் உள்ளிட்ட சிலர் போராட்ட இடத்தைவிட்டு அகல மறுத்ததால் அங்கு இரவிரவாகப் பெரும் பதற்றம் நிலவியது.
பலாலி படை முகாம் பகுதிக்குள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளில் அனுமதியின்றிச் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டு அண்மையில் கலாச குடமுழுக்குக் கண்ட தையிட்டி விகாரையை அகற்றுமாறு கோரி நேற்று மாலை போராட்டம் தொடங்கியது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அழைப்பின் பேரில் ஆரம்பமான இந்தப் போராட்டம் நாளை வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அழைப்பு விடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பருத்தித்துறை வீதி, தையிட்டி கலைவாணி வீதி முகப்பில் தொடங்கிய ஆர்ப்பாட்டம் ஊர்வலமாக நகர்ந்து தையிட்டி விகாரை வரை சென்று விகாரைக்கு முன்பாக நிலைகொண்டது.
14 குடும்பங்களுக்குச் சொந்தமான அண்ணளவாக 8 ஏக்கர் காணியை விடுவிக்கக் கோரியும் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட பௌத்தக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும் பௌத்தமயமாக்கல் திணிப்பை எதிர்த்தும் போராட்டக்காரர்கள் குரல் எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தையொட்டி விகாரை முன்பாக காவற்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. விகாரைக்குச் செல்லும் பாதையை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று காவல் அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து விகாரைக்குச் செல்லும் வீதியின் எதிர்க் கரையில் போராட்டக்காரர்கள் நிலை எடுத்தனர். அங்கிருந்தபடி தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். இரவு சுமார் 8 மணியளவில் திடீரென அந்தப் பகுதியில் காவற்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் பலப்படுத்தத் தொடங்கினர். வீதித் தடுப்புக்களை ஏற்படுத்தினர். கூர்மையான இரும்புக் கம்பிகளோடான தடுப்புக்களையும் நிறுவினர். வீதிகளின் குறுக்கே வாகனங்களை நிறுத்தி பாதைகளை மறித்தனர். போராட்டம் இடம்பெற்ற பகுதிக்குள் எவரும் நுழைவதைத் தடை செய்தனர்.
இவ்வளவு முன்னேற்பாடுகளுக்கும் பின்னர் போராட்டக்கார்களை அங்கிருந்து விரட்டத் தொடங்கினர். பெரும்பாலானவர்கள் விரட்டப்பட்டு விட்ட போதும் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னணியின் பொதுச்செயலாளருமான செ.கஜேந்திரன், முன்னணி செயற்பாட்டாளர் சட்டத்தரணி காண்டீபன் உள்ளிட்ட சிலர் தாம் அமர்ந்திருந்த இடத்தைவிட்டு அகல மறுத்து அங்கேயே அமர்ந்திருந்தனர்.
இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இரவிரவாகப் அவர்களையும் அஙங்கிருந்து அகற்றப் காவற்துறையினர் தீவிரமாக முயன்றனர். எனினும், அவர்கள் தாம் அமர்ந்திருந்த இடத்தைவிட்டு நகரவில்லை.
இதையடுத்து அவர்களுக்கான உணவு, தண்ணீர் என்பவற்றை வழங்குவதையும் காவற்துறையினர் தடை செய்தனர். அவர்கள் அமர்ந்திருந்த இடத்துக்குச் செல்ல எவரையும் காவற்துறையினர் அனுமதிக்கவில்லை. காவற்துறை தடைக்கு அப்பால் சட்டத்தரணி க.சுகாஷ் உள்ளிட்ட குழுவினர் காவற்துறையினருடன் பேசி போராட்டத்தில் இருப்பவர்களுக்கான தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப முயற்சித்தபோதும் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.