நியூ டயமன்ட் கப்பலினால் சமுத்திரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து விசாரணை

41

தீ விபத்து ஏற்பட்ட நியூ டயமன்ட் கப்பலினால், சமுத்தரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்த இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்காக 7 பேர் கொண்ட குழு, குறித்த பகுதிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக கடல் மாசுறலைத் தடுக்கும் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர், பேராசிரியர் டர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.

ருகுணு பல்கலைக்கழகத்தின் சமுத்திர விஞ்ஞானப் பிரிவின் நிபுணர்கள் இருவரும் கடல் மாசுறலைத் தடுக்கும் பாதுகாப்பு அதிகார சபையின் நிபுணர்கள் இருவரும் நாரா நிறுவனத்தை சேர்ந்த நிபுணர்களும் இந்த குழுவில் அடங்குகின்றனர்.

கப்பல் அமைந்துள்ள பகுதியிலுள்ள கடல் நீர் மாதிரியை பெற்று அதனை பரிசோதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கடல் மாசுறலைத் தடுக்கும் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர், பேராசிரியர் டர்னி பிரதீப் குமார குறிப்பிட்டார்.

இது தொடர்பிலான அறிக்கையை எதிர்வரும் 3 நாட்களுக்குள் தயாரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, நியூ டயமன்ட் எண்ணெய் கப்பலில் நேற்று (திங்கட்கிழமை) மீண்டும் தீ பரவியது. எனினும் தீ இதுவரை கட்டுப்படுத்தப்படவில்லை என கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.

நியூ டயமன்ட் கப்பல், சங்கமண்டி பகுதியில் 24 கடல்மைல் தூரத்திலுள்ளதாகவும் அவர் கூறினார். கப்பலில் பரவிய தீ தொடர்பில் கண்காணிப்பதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் விசேட விமானமொன்றை ஈடுபடுத்தியுள்ளதாக விமான படை தெரிவித்துள்ளது.

அத்துடன் தீயை கட்டுப்படுத்துவதற்கு பெல் 212, மற்றும் எம்.ஐ 17 ரக ஹெலிகொப்டர்கள் அம்பாறை விமானப்படை முகாமில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க குறிப்பிட்டார். கப்பலில் மீண்டும் பரவிய தீயை கட்டுப்படுத்துவதற்கு விமானம் மூலம் நீர் மற்றும் இரசாயன பதார்த்தங்களை விசுறுவதற்கு இன்றைய தினமும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான படை பேச்சாளர் மேலும் கூறினார்.