கஜேந்திரகுமாரின் விசேட கூற்று நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் என்ன? நளின் பண்டார

d4d5ffd9 4a6df075 mahinda yapa abewardana 850x460 acf cropped
d4d5ffd9 4a6df075 mahinda yapa abewardana 850x460 acf cropped

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் விசேட கூற்று நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் என்னவென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இன்று சபையில் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினார். கஜேந்திரகுமாரை கட்சி தலைவராக அங்கீகரித்துள்ளோம், எனினும் நீதிமன்ற வழக்கு தொடுக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்த கூற்றொன்றை அவர்  முன்வைத்த காரணத்தினால் தான் அவரது விசேட கூற்று நிராகரிக்கப்பட்டது என சபாநாயகர் விளக்கமளித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை சபை அமர்வுகளின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நளின் பண்டார ஒழுங்குப்பிரச்சினை எழுப்பி இது குறித்து கேள்வி எழுப்பினார். 

இதன்போது அவர் கேட்கையில் “27/2 இன் கீழ் கேள்வி எழுப்பப்பட்ட கேள்விக்கு இடமளிக்காது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நிராகரிக்கப்பட்டார். இதில் 76(1) இன் கீழ் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள காரணி என்ற கூற்று முன்வைக்கப்பட்டது. 

இன்னொருபுறம் பொன்னம்பலம் அவர்கள் கட்சி தலைவராக அங்கீகரிக்கப்படவில்லை என்ற காரணி முன்வைக்கப்பட்டது. ஆனால் கட்சி தலைவர் என்ற காரணத்தினால் தான் அவருக்கு 27/2 இன் கீழ் அங்கீகாரம் வழங்கப்பட்டது. நீதிமன்ற விசாரணையில் உள்ள விடயம் என அவரது கூற்றை  தடுத்தால் அது 27/2 இன் கீழ் பாதிப்பை ஏற்படுத்தாது. எனவே என்ன காரணத்திற்காக அவரது உரிமை நேற்று சபையில் மறுக்கப்பட்டது என்பது சபைக்கு அறிவிக்கப்பட வேண்டும். நேற்றைய தினம் இதற்கான விளக்கத்தை நீங்கள் முன்வைக்கவில்லை என்றார்.  

சபாநாயகர்:- அவரை கட்சி தலைவராக அங்கீகரித்தே 27/2 இன் கீழ் வாய்ப்பு வழங்கப்பட்டது. எனினும் நீதிமன்றத்தில் உள்ள விவகாரம் குறித்த கூற்றொன்றை அவர்  முன்வைத்த காரணத்தினால் தான் அவரது விசேட கூற்று நிராகரிக்கப்பட்டது. அவர் கொண்டுவந்த விடயம் நேற்று வரையில் நீதிமன்ற விசாரணையில் இருந்தது. எனவே அவர் முறையாக தனது கூற்றை முன்வைக்கவில்லை என்ற காரணத்தினை உணர்ந்தே நான் அதனை நிராகரித்தேன். அதேபோல் அவர் ஒரு வழக்கில் சாட்சியமளிக்க வேண்டியுள்ள காரணத்தினால் இன்று அவர் நீதிமன்றம் சென்றுள்ளார் என்றார்.