13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்- மோடி

1579254833 7898
1579254833 7898

பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் . காணொலி காட்சி வழியாக நடந்த இந்த பேச்சு வார்த்தையின்போது இலங்கையில் தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்க வலியுறுத்தினார்.

பேச்சு வார்த்தையின் தொடக்கத்தில் பிரதமர் மோடி, “உங்கள் கட்சியின் தேர்தல் வெற்றிக்கு பின்னர் இந்திய, இலங்கை உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்குவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இரு நாடுகளின் மக்களும் நம்மை புதிய நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புகளுடனும் பார்க்கிறார்கள்.

எனது அரசின் அண்டை நாடுகளுக்கான முதல் கொள்கை மற்றும் சாகர் (பிராந்தியத்தில் அனைவருக்குமான பாதுகாப்பு, வளர்ச்சி) கோட்பாட்டின்படி, இலங்கையுடனான உறவுகளுக்கு இந்தியா சிறப்பு முன்னுரிமை தருகிறது” எனவும் பிரதமர் மோடி மகிந்த ராஜபக்சவிடம் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வகை செய்துள்ள அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மஹிந்தவிடம், பிரதமர் மோடி வலியுறுத்தி கூறினார். இது அமைதி மற்றும் நல்லிணக்க செயல்முறைக்கு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடலில் மீன் பிடிக்கச்செல்கிற தமிழக மீனவர்கள் அவ்வப்போது இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல் படையினால் பிடித்துச்செல்லப்படுகிற விவகாரம் குறித்தும் பிரதமர் மோடி, குறிப்பிட்டார். அதைத்தொடர்ந்து, மீனவர்கள் பிரச்சினையில் ஆக்கப்பூர்வமாகவும், மனிதாபிமான ரீதியிலும் அணுக வேண்டும், அதையே தொடர வேண்டும் என்றும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

இலங்கையில் புத்த மதத்தினருடனான உறவுகளை மேம்படுத்துவதற்காக பிரதமர் மோடி, அந்த நாட்டுக்கு 15 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்குவதாகவும் அறிவித்தார்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் இந்தியா, பிற நாடுகளுக்கு செய்த பணிக்காக பிரதமர் மோடியிடம் மஹிந்த நன்றி தெரிவித்துக்கொண்டார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச பேசும்போது, இலங்கை கிழக்கு கடலோர பகுதியில் எம்.டி. நியு டயமண்ட் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் நடவடிக்கையில் இந்தியா செய்த உதவியை நினைவுகூர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான அதிக ஒத்துழைப்புக்கு அது வாய்ப்பு வழங்கியது என குறிப்பிட்டார்.

தொடர்ந்து இரு தலைவர்களும் ஒட்டுமொத்த பாதுகாப்பு, வர்த்தக உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதற்கான வழிமுறைகளையும், முக்கியமான துறைகளில் இரு தரப்பும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது பற்றியும் விரிவாக விவாதித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இரு தலைவர்களின் சந்திப்பு குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இந்திய பெருங்கடல் பிரிவு இணைச்செயலாளர் அமித் நாரங் நிருபர்களிடம் எடுத்துரைத்தார்.

அப்போது அவர், “சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கவுரவம் ஆகியவற்றுக்கான தமிழர்களின் எதிர்பார்ப்புகளை புதிய அரசு உணர்ந்து அதை செயல்படுத்துவதற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இரு தரப்பு ராணுவ ஒத்துழைப்பின் வலுவான தன்மை குறித்து மோடியும், ராஜபக்சவும் திருப்தி தெரிவித்தனர். கடல்சார் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்” என கூறினார்.

இதேவேளை, சந்திப்பின் பின்னர் இலங்கை தரப்பில் ஊடகங்களிற்கு அனுப்பப்பட்ட அறிக்கையில், 13வது திருத்தம் குறித்து மோடி வலியுறுத்தியது குறித்து மூச்சும் விடப்படவில்லை.