இந்திய பிரதமர் மோடியின் கருத்திற்கு கூட்டமைப்பு வரவேற்பு !

unnamed 32
unnamed 32

இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் என இந்தியபிரதமர் மோடி கூறிய கருத்தை தாம் வரவேற்கின்றோம் என தமிழ் தேசியகூட்டமைப்பு தெரிவித்துள்ளது .

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இணையவழி ஊடாக இரு தரப்பு பேச்சுவார்த்தை கடந்த சனிக்கிழமை நடைபெற்றிருந்தது.

குறித்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து இருநாடுகளும் இணைந்து கூட்டறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த கூட்டறிக்கை தொடர்பாக தனியார் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல்ஒன்றில் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார் .

தொடந்தும் அந்த பத்திரிகைக்கு கருத்து தெரிவித்த அவர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளியிடப்பட்ட மூன்று கூட்டறிக்கைக்கு பின்னர் தற்பொழுதுதான் ஒரு கூட்டறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு இடைப்பட்ட காலங்களில் எந்தவொரு கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டிருக்கவில்லை.

மேலும், இதற்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கைகளை விட இந்த கூட்டறிக்கையில் என்ன விஷேட அம்சம் என்றால், ‘நீதி’ என்ற சொல் முதற்தடவையாக கூறப்பட்டிருக்கிறது. இது மிக முக்கியமான ஒன்று.

இவ்வாறு இரு நாடுகளும் இணைந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டிருந்த நிலையில், இலங்கை வெளிவிவகார அமைச்சு தனியாக ஒரு அறிக்கையை சிங்கள மொழியில் மாத்திரம் வெளியிட்டிருக்கிறது.

குறித்த அறிக்கையில், இரு நாடுகளும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்ட பல விடயங்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. இரண்டு நாடுகள் இணைந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டால், அதன் பின்னர் தனியாக ஒரு நாடு அறிக்கையை வெளியிடுவதில்லை.

ஆனால், இலங்கை அரசாங்கம் அந்த செயற்பாட்டை செய்திருக்கிறது. இதனூடாக நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது என்பது தெளிவாகிறது.

மேலும், 13ஆவது திருத்தச் சட்டத்தில் ஆரம்பித்து தமிழ் மக்களுடைய அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்திருக்கிறார்.

புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கப்போவதாக அரசாங்கம் கூறிவருகின்ற இந்த சந்தர்ப்பத்தில், இந்திய பிரதமரின் இந்த அறிவிப்பு மிக முக்கியமான ஒரு விடயமாகும். எனவும் சுமந்திரன் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத் தக்கது