விரைவில் நாட்டுக்கு வருகிறார் இந்தியாவின் வெளிவிவாகார அமைச்சர்!

31 dr s jaishankar 600 jpg
31 dr s jaishankar 600 jpg

தற்போதுள்ள கொரோனா நெருக்கடிகள் சொற்பகாலத்தில் கட்டுக்குள் வரும் பட்சத்தில் குறுகிய கால விஜயமொன்றை இந்திய வெளிவிவாகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் விரைந்து மேற்கொள்வதற்குரிய சாத்தியப்பாடுகள் அதிகமுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவிற்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்தவார நடுப்பகுதியில் நடைபெற்றிருந்தது.

அதாவது, அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு விஜயம் செய்து திரும்பியிருந்த வேளை அவசரமாக இந்திய உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் இடம்பெற்றிருந்தது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மட்டுமே பங்கெடுத்திருந்தார்.

இந்தச் சந்திப்பு தொடர்பில் அவர் தெரிவிக்கையிலேயே மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்திய உயர்ஸ்தானிகரின் அழைப்பில் நான் அவரை நேரில் சந்தித்திருந்தேன். இதன்போது பாரதப்பிரதமர் மோடியுடனான கூட்டமைப்பின் சந்திப்பு பிற்போடப்பட்டமை தொடர்பில் கலந்துரையாடினேன். பாரதப் பிரதமருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைந்து கலந்துரையாடலொன்றை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

எனினும் சமகாலத்தில் காணப்படுகின்ற கொரோனா சூழல்களால் அதற்கான சந்தர்ப்பங்கள் நழுவிச் செல்லும் பட்சத்தில் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்படும் கலாசார நிலையத்தினை திறப்பதற்காக பாரதப்பிரதமர் வருகின்றபோது நாம் பிரத்தியேகமான சந்திப்பொன்றை மேற்கொள் முடியும் என்றும் கூறப்பட்டிருக்கின்றது.

இதனைவிடவும் பாரதப்பிரதமரின் விஜயத்திற்கு முன்னதாக வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இலங்கைக்கு வருகை தருவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதற்கான நிகழ்ச்சி நிரல் தற்போதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.

இவ்வாறான நிலையில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுதல், வளங்கள் சூறையாடப்படுதல், குடிப்பரம்பலை திட்மிட்டு மாற்றுதல், வரலாற்று இடங்களை கையகப்படுத்தல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது.

விசேடமாக புதிய ஆட்சியாளர்களின் காலத்தில் இச்செயற்பாடுகள் வேகமெடுத்திருக்கின்றன. இந்த விடயங்கள் சம்பந்தமாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தபோதம் பாரமுகமான நிலைமைகள் நீடிக்கின்றன. ஆகவே இந்தியா இந்த விடயத்தில் கூடிய கரிசனை செலுத்துமாறு கேட்டுக்கொண்டேன்.

அத்துடன் இந்தியாவானது வடக்கு கிழக்கு மக்களின் பொருளாதார மீட்சிக்கான உரிய முதலீடுக்களைச் செய்வதற்கு பின்னடிப்புக்களைச் செய்யாது உடன் முன்வர வேண்டும் என்றும் நான் கோரினேன். இந்தியா அவ்வாறான முன்முயற்சியொன்றை எடுக்கின்றபோது தமிழ் மக்களின் இருப்பும் இந்தியாவின் நிலைப்பும் உறுதியாகும் என்பதையும் நான் எடுத்துக்கூறியிருந்தேன்.

இந்த விடயங்கள் சம்பந்தமாக இந்தியா அதிகூடிய கரிசனை கொள்வதாகவும் அடுத்துவரும் காலத்தில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக இந்தியா தமது நிலைப்பாட்டினை மாற்றவில்லை என்றும் ஆக்கபூர்வமான வகிபாகத்தினை தொடர்ந்தும் வழங்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் உயர்ஸ்தானிகர் என்னிடத்தில் கூறினார்.

மேலும் புதிய அரசியலமைப்பு பணிகள் தொடர்பில் ஆழ்ந்த கரிசனை கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டதோடு இலங்கைத் தீவில் நிலையான சமாதானத்திற்காக இந்தியான தொடர்ந்தும் தமிழ் மக்களுடன் இணைந்து செயற்படும் என்றும் குறிப்பிட்டதாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்