மயிலத்தமடு,மாதவணை தொடர்பில் கிழக்கு ஆளுநரின் செயற்பாடு குறித்து நா.உ கோவிந்தன் கருணாகரம் அதிருப்தி!

DSC04588 720x450 1
DSC04588 720x450 1

மயிலத்தமடு, மாதவணை தொடர்பான கிழக்கு ஆளுநரின் செயலானது சமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தினையும், அவரால் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட குழுவையும் அவமதிக்கும் செயலாகவே நான் கருதுகின்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் நாடாளு மன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் குறிப்பிட்டுள்ளார்.

Screenshot 20201102 182629
Screenshot 20201102 182629

மயிலத்தமடு, மாதவணை பிரச்சனை சம்மந்தமாக மகாவலி அபிவிருத்தி அமைச்சினால் பாரளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய ஒரு குழுவினை அமைத்திருக்கையில் கிழக்கு மாகாண ஆளுநர் அக்காணிகளை சேனைப் பயிர்ச்செய்கைக்காக வழங்கியுள்ளதாக தொலைக்காட்சியில் தெரிவித்த விடயம் தொடர்பில் குறிப்பிட்டும், அப்பயிர்ச் செய்கையினை உடன் நிறுத்துமாறும் வலியுறுத்தி அமைச்சர் சமல் ராஜபக்ஷ அவர்களுக்கு இன்றைய தினம் (02) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த 23.10.2020 அன்று மகாவலி(டீ) வலய மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சற்தரைப் பிரச்சனை சம்மந்தமாக கௌரவ அமைச்சர் சமல் ராஜபக்ஷ தலைமையில் அவரது அமைச்சில் வடக்கு கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட இராஜாங்க அமைச்சர் ஸ்ரீபால கம்லத் மற்றும் பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்ட கூட்டத்தில் அப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமையால், மட்டக்களப்பு மாவட்ட நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், அம்பாறை மாவட்ட பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த முன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொலநறுவை மாவட்டத்தின் இராஜாங்க அமைச்சர் ஸ்ரீபால கம்லத், மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்கள், ஏறாவூர்ப்பற்று மற்றும் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர்கள், மகாவலி அபிவிருத்தி அதிகாரிகள் உட்பட ஒரு குழுவை அமைத்து 02.11.2020 அதாவது இன்று காலை 09.00 மணிக்கு வெலிகந்தை மகாவலி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதன் பின்பு சம்மந்தப்பட்ட இடங்களான மயிலத்தமடு மாதவணைப் பிரதேசங்களுக்கு நேரடியாக விஜயம் செய்து ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இருந்தும் தற்போதைய கொவிட் 19 சம்மந்தமான அசாதாரண சூழ்நிலையினால் இன்று நடைபெறவிருந்த அந்த நிகழ்வு நிறுத்தப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

இவ்வேளையில் கடந்த 29.10.2020 வியாழக்கிழமை கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் அவர்கள் குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு விஜயம் செய்தது மாத்திரமல்லாமல், 30.20.2020 அன்று தொலைக்காட்சிக்கு அப்பிரதேசத்தின் 500 ஏக்கர் காணிகளை சேனைப் பயிர்ச் செய்கைக்காக ஒதுக்குவதாகத் தெரிவித்திருக்கின்றார். ஆளுநரின் இச்செயலானது கௌரவ சமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தினையும், அவரால் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட குழுவையும் அவமதிக்கும் செயலாகவே நான் கருதுகின்றேன்.

எனவே இதற்குப் பொறுப்பான அமைச்சராகிய கௌரவ சமல் ராஜபக்ஷ அவர்கள் உடனடியாக இதில் தலையிட்டு தங்களினால் அமைக்கப்பட்ட இந்தக் குழு கூடி ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கும் வரை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தச் சேனைப் பயிர்ச்செய்கையைத் தற்காலிகமாக நிறுத்துமாறு தங்களைக் கேட்டுக் கொள்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.