கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்தது

corona germ
corona germ

நாட்டில் நாள் ஒன்றில் அடையாளங் காணப்பட்ட அதிகளவான கொவிட் 19 தொற்றுறுதியானவர்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளனர்.

இதற்கமைய நேற்றைய தினம் 878 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி நாள் ஒன்றில் 866 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானது.

அவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா நோயாளர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என்று இராணவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி பேலியகொடை மற்றும் மினுவாங்கொடை இரட்டை கொத்தணிகளில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 861 ஆக அதிகரித்துள்ளது

அத்துடன் இலங்கையில் இதுவரையில் கொரோனா நோயுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 410 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்தநிலையில் தொற்றுறுதியான 6 ஆயிரத்து 982 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதன்படி சிலாபம் பகுதியை சேர்ந்த 66 வயதான பெண்ணொருவர் கொரோனா நோயால் பீடிக்கப்பட்டு உயிரிழந்தார்.

கடந்த 30 ஆம் திகதி சிலாபம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் மரணித்துள்ளார்.

கொரோனா தொற்றுறுதி காரணமாக ஏற்பட்ட மாரடைப்பால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் கொழும்பு 13ஐ சேர்ந்த ஆண் ஒருவரும் கொரோனா நோயால் மரணித்துள்ளார்.

கடந்த 30 ஆம் திகதி தமது வீட்டில் வைத்து உயிரிழந்த நிலையில் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுடன் நிமோனியா நிலை அதிகரித்து இந்த மரணம் சம்பவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 487 பேர் நேற்று குணமடைந்தமையை அடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 304 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுறுதியான நிலையில் மரணிப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்க போவதில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப குழுவின் இறுதி தீர்மானம் கிடைக்கப்பெறும் வரையில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய செயற்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.