மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரின் குற்றச்சாட்டை மறுத்தது லங்கா சதோச நிறுவனம்!

1593918027750
1593918027750

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிப்பதாக லங்கா சதோச நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவின் ஊடாக லங்கா சதோச நிறுவனத் தலைவர் நுஷாத் எம் பெரேரா இன்று (06) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறக்குமதி வரி குறைக்கப்பட்டவுடன், தனது நெருங்கிய நண்பரிடம் இருந்து 5 ஆயிரம் மெட்ரிக் டொன் சீனியை முறையற்ற விதத்தில் சதோச நிறுவன தலைவர் கொள்வனவு செய்தார் என அனுர குமார திசாநாயக்க நாடாளுமன்றில் தெரிவித்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட வழிமுறையான விலை மனுக் கோரலின் ஊடாகவே பொருட்கள் கொள்வனவு செய்யப்படுவதாக, லங்கா சதோச நிறுவனத் தலைவர் நுஷாத் எம் பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த கொள்வனவு செயற்பாடானது கடந்த ஒக்டோபர் 20 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், குறித்த கொள்வனவு செயற்பாட்டின் போது 750 மெட்ரிக் டொன் சீனி மாத்திரமே கொள்வனவு செய்யப்பட்டதாகவும், இது அரசாங்கத்தின் அனைத்து நடைமுறைகளுக்கும் உட்பட்டே முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான அனுர குமார திசாநாயக்க குறிப்பிட்டது போன்று, குறித்த கொள்வனவு செயற்பாட்டின் போது 5 ஆயிரம் மெட்ரிக் டொன் சீனி கொள்னவவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றமை தவறான கூற்றாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், எந்தவொரு நபரிடமிருந்தும் எந்தவொரு கொள்வனவு நடவடிக்கைக்காகவும் ஜனாதிபதி தனக்கு அழுத்தம் வழங்கவில்லை எனவும், லங்கா சதோச நிறுவனத் தலைவர் நுஷாத் எம் பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள கொள்வனவு நடைமுறைகளுக்குப் புறம்பாக எந்தவொரு சட்டவிரோத கொள்வனவு நடவடிக்கைகளும் லங்கா சதோச நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.