பறிபோகும் தமிழர்களின் இதயபூமி

manalaru
manalaru

கடந்த 1988ம் ஆண்டு சித்திரைத் திங்கள் 16 ஆம் நாள் ஒரு சிறப்பு அரச வர்த்தமானி (Gazette) அறிவித்தல் மூலம் முல்லைத்தீவு மாவடத்தின் மணலாற்றுப் பிரதேசம் வெலிஓயாவாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

அது மட்டும் அல்லாது இலங்கையின் 26 ஆவது மாவட்டமாகவும் அது பிரகடனப் படுத்தப்பட்டு அனுராதபுர மாவட்டத்தோடு இணைக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு தமிழர் வாழ்விடங்களை நிரந்தரமாக பிரித்து விடும் நோக்கில் உருவாக்கப்பட்ட சிங்கள குடியேற்றமான வெலி ஓயா இன்று 18 கிராமங்களைக் கொண்டிருக்கின்றது. தற்போது 11,189 பேர்களை உள்ளடக்கிய 3336 குடும்பங்கள் இந்தக் குடியிருப்பில் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுள் பெரும்பான்மையோர் குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் ஆவார்கள். இங்குள்ள பெரும்பான்மை மக்கள் கோத்தாபய ராஜபக்‌ஷவிற்கு வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1984 இல் முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த 42 கிராமங்களில் காலம் காலமாக வாழ்ந்து வந்த 13,288 தமிழ்க் குடும்பங்கள் 48 மணித்தியாலக் காலக்கெடுவுக்குள் அவர்களது வீடுவாசல்களில் இருந்து வெளியேறுமாறும் வெளியேறத் தவறினால் பலவந்தமாக அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் எனவும் அச்சுறுத்தி விரட்டப்பட்டனர் .

2009 யுத்தம் முடிவடைந்த பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகாரசபை தனது செயற்றிட்ட பகுதியை விரிவாக்கி மாய புர என்ற பெயரில் சிங்கள குடியேற்றம் ஒன்றை செய்தார்கள். இதன் மூலம் 117.1 சதுர கி.மீ.பரப்பளவிலிருந்த வெலிஓயா தற்போது, 164.2 சதுர கி.மீ. பரப்பளவில் வெறும் சிங்கள பிரிவாக விஸ்தீரணமாகி இருக்கிறது.

2009 ஆம் ஆண்டு மயில் குளம் என்று அழைக்கப்பட்ட இடம் தற்போது மொனரவெவ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர் .

அதேபோல ஆமையன் குளம் என்ற பெயரில் இருந்த நிலங்களை இரி இப்பன்வெவ என பெயர் மாற்றி, அங்கும் சிங்களக் குடியேற்றம் செய்தார்கள் .

அதுமட்டுமா? முந்திரிகை குளம் பகுதி நெலும் வெவ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, காணிகள் அங்கும் காணிகள் அபகரிக்கப்பட்டு இருக்கின்றன

இதன் நீட்சியாக வவுனியா கொக்காச்சான்குளம் என்ற தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாயக் கிராமம் ஒன்றை, 2012 ஆம் ஆண்டு கலாபோவஸ்கம என சிங்களப் பெயரை மாற்றி சுமாா் மூவாயிரத்தி 500 சிங்கள குடும்பங்களை குடியேற்றினார்கள்.

அந்த பகுதியில் 2018 ஆம் ஆண்டு குடியேறிய மூவாயிரத்தி 500 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களையும் அரசாங்கம் சட்ட ரீதியாக வழங்கி இருக்கின்ற நிலையில், இன்றைய அரசதலைவர் கோத்தபாய ராஜபக்க்ஷவிற்காக வாக்களித்த மக்கள் இவ்வாறு குடியேற்றப்பட்ட சிக்கள் மக்களே.