கோறளைப்பற்று பொது கட்டடம் விலங்குகள் சரணாலயமாக காட்சி; மக்கள் கவலை

01 14 1
01 14 1

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் தியாவட்டவான் கிராம அதிகாரி பிரிவிலுள்ள பாலைநகர் கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடம் விலங்குகளின் சரணாலயமாக காணப்படுவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த 2016ம் ஆண்டு காலப்பகுதியில் அரசாங்கத்தின் நிதி உதவி மூலம் கட்டப்பட்ட கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடம் கடந்த வருட காலமாக முழுமையாக இயங்காத நிலையில் தற்போது விலங்குகள் கட்டப்படும் நிலையில் விலங்குகளின் சரணாலயமாக காணப்படுகின்றது.

அத்தோடு கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடம் இயங்காத நிலையில் இங்கு பயன்பாட்டுக்கு வழங்கப்பட்ட தளபாடங்கள் உட்பட்ட பல பொருட்கள் இல்லாமல் காணப்படுவதுடன், அலுமாரிகள் உடைந்த நிலையில் காணப்படுகின்றது.

இங்கு பெரும்பாலான பகுதிகளில் மாடுகளின் சாணம் மற்றும் வைக்கோல், பறவைகளின் எச்சங்கள் என்பன காணப்படுவதுடன், மின்சார சாதனங்கள் இன்றி காணப்படுவதுடன், வளாகம் முழுவதும் பற்றைக்காடாக காட்சி அளிக்கின்றது.

மேலும் இரவு நேரங்களில் குறித்த கட்டடத்தினை போதைப் பொருள் பாவனை மற்றும் சீர்கேடான, முறைகேடான செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டு காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளரின் கவனத்துக்கு பல தடவைகள் தெரிவித்தும் எந்தவித பதிலும் கிடைக்காத நிலையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கும் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இடம்பெறவில்லை.

எனவே பாலைநகர் கிராமத்தில் மற்றும் அதனை அண்டி வாழும் தமிழ், முஸ்லிம்கள் மக்களின் அவசிய தேவைகளான குடும்பநல கிளினிக், பாலர் பாடசாலை, பல்தேவை கட்டடம், கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடம் என பல தேவைகளுக்கு கட்டடம் இல்லாத நிலையில் பெரிதும் கஷ்டப்படுகின்றனர்.

ஆகவே குறித்த விடயம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் மற்றும் உரிய அரச அதிகாரிகள் இதில் கூடிய கவனம் செலுத்தி மிக விரைவாக கட்டத்தினை புனரமைப்பு செய்து மக்கள் பாவனைக்கு கையளிக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அத்தோடு குறித்த பிரதேசத்தில் வாழும் சில மக்கள் கட்சி ரீதியாக தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கட்சி பாகுபாடுகளின்றி அனைவருக்கும் சமமான முறையில் அபிவிருத்திகளை செய்து தருமாறு பிரதேச மக்கள் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளை கேட்டுக் கொள்கின்றனர்.