கொள்கை பிரகடனங்களை நிறைவேற்ற முடியாத நிலையில் அரசு

G.L.Peiris
G.L.Peiris

ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்த கொள்கை பிரகடனங்கள் எதையும் செய்ய முடியாத நிலையில் அரசு வருமானமின்றி காணப்படுவதாக பொதுஜன பெரமுனவின் ஸ்தாபக உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இப்படியான ஒரு நிலையில் உடனடியாக பாராளுமன்ற தேர்தல் ஒன்றை நடத்தி 120 ஆசனங்களை பெற்றாவது பலமான ஒரு அரசை அமைக்க வேண்டும் என ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் 225 பேரில் தற்பொழுது 104 பேருடைய ஆதரவே தமக்கு உள்ளதாகவும், இந்த ஆதரவை வைத்துக் கொண்டு அரசாங்கத்தின் நோக்கங்களை நிறைவேற்ற முடியாதுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

19ம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் மார்ச் மாதம் வரை பாராளுமன்றத்தை கலைக்க முடியாது. 2/3 பெரும்பான்மை இருந்தால் மட்டுமே பாராளுமன்றத்தை கலைக்க முடியும். அது சாத்தியமா எனத் தெரியவில்லை. மார்ச் 1ம் திகதி பாராளுமன்றத்தை கலைத்தாலும் தேர்தலை நடத்த ஏப்ரல் அல்லது மே மாதம் வரை செல்லும் என தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கைகளை சரியாக நிறைவேற்றுவதற்கு இன்னும் 6 மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லையென்பதை சாட்டாகக் கொண்டு, கால இழுத்தடிப்பைச் செய்ய தாம் விரும்புவதில்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.