கொட்டகலையில் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

images 1
images 1

கண்டி மாவட்டத்தின் கலஹா காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட தெல்தோட்டை பிரதேசத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெல்தோட்டை பிரதேசத்துக்குப் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், குறித்த 7 பேரும், கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் இதுவரையான காலப்பகுதியில் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, வைத்திய அதிகாரி ஜே. கணேஷ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த பிரதேசத்தில் இன்றைய நாளில் 90 பேருக்கு பி சி ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானோருடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய நபர்களுக்கே இவ்வாறு பி சி ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், இவர்களில் வட்டவளை ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கொட்டகலை, தலவாக்கலை மற்றும் வட்டகொடை பிரதேசங்களை சேர்ந்த குறித்த நபர்கள், வாகனங்களின் ஊடாக அழைத்து வரப்பட்டு,பி சி ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கட்டுநாயக்க – ஹீனட்டியன பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, கட்டுநாயக்க – சீதுவ பிரதேசத்துக்குப் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் சுரேஷ் குமார தெரிவித்துள்ளார்.

அத்துடன், இவர்களில் 9 வயதுடைய பெண் குழந்தை ஒன்றும் உள்ளடங்குவதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த மூவரும், மேலதிக சிகிச்சைகளுக்காக வதுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.