யாழ் தேவி ரயிலை சரி செய்யும் பணிகள் முன்னெடுப்பு

yaldevi
yaldevi

யாழ்தேவி கடுகதி ரயில் தடம் புரண்டமையினால் வடக்கு ரயில் பாதையில் அம்பன்பொல – கல்கமுவக்கு இடையிலான ரயில் சேவையில் ஏற்பட்ட தடை தொடர்ந்தும் நிலவி வருகின்றது.

வடக்கு ரயில் பாதையில் ரயில் சேவை தற்பொழுது கல்கமுவ வரையில் மாத்திரம் இடம்பெறுகின்றது. அத்தோடு அம்பன்பொல – கல்கமுவவிற்கு இடையில் பஸ் சேவைள் இடம்பெற்று வருகின்றன.

கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் வரையிலும் மற்றும் தலைமன்னார் வரையிலும் நேற்று (Nov.27) சேவையில் ஈடுபடவிருந்த 2 ரயில்களும் இதன் காரணமாக இரத்து செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இன்று (Nov.28) காலை தொடக்கம் வடக்கிற்கான
ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அம்பன்பொல – கல்கமுவவிற்கு இடையில் பயணிகள் போக்குவரதிற்காக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு ரயில் சேவை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே போக்குவரத்து பிரிவின் அதிகாரி காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

தடம்புரண்ட யாழ் தேவி கடுகதி ரயிலை மீண்டும் சரி செய்யும் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். யாழ் தேவி ரயில் நேற்று (Nov.27) மாலை காங்கேசந்துறையில் இருந்து கல்கிசை நோக்கி சென்றுகொண்டிருந்த போது தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாக ரயில் பாதையில் சுமார் 100 மீற்றர் தூரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அனர்த்தம் தொடர்பில் கண்டறிவதற்கு ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர், பொறியியலாளர் டிலந்த பெர்னாண்டோ நேற்று மாலை அனர்த்தம் இடம்பெற்ற இடத்திற்கு சென்றிருந்தார்.

இவ் விபத்துக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இது தொடர்பாக ரயில்வே திணைக்களமும் பொலிஸாரும் லிசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்தேவி ரயில் தடம்புரண்டமை குறித்து விசாரணை மேற்கொள்ள மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.