யாழ்.பல்கலை துணைவேந்தர் தெரிவிற்கான கூட்டம்

Jaffna
Jaffna

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவு செய்வதற்கான யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பேரவையின் விசேட கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்தவர்களின் தகுதி, தராதரங்களை ஆராய்வதற்கான மதிப்பீட்டுக் குழுவை அமைப்பது தொடர்பிலும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவிற்கான தேர்தல் நாளைத் தீர்மானிப்பது தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்ப முடிவுத் திகதி கடந்த ஒக்டோபர் மாதம் முடிவடைந்த நிலையில் இரண்டு புலம்பெயர் தமிழ்ப் பேராசிரியர்கள் உட்பட ஒன்பது பேர் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்தனர்.

கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் துணைவேந்தர் தெரிவுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், முன்னாள் துணைவேந்தரும், தற்போதைய விண்ணப்பதாரிகளில் ஒருவருமான பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததையடுத்து துணைவேந்தர் தெரிவிற்கான பணிகளை ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை ஒத்தி வைக்குமாறு பணிக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதித் தேர்தல் முடிந்துள்ள நிலையில், மதிப்பீட்டுக்குழுவினூடாக விண்ணப்பதாரர்களின் தகுதிகளை ஆராய்ந்து பேரவை உறுப்பினர்களின் வாக்களிப்பின் முடிவில் அதிக வாக்குகளைப் பெறும் முதல் மூன்று பேரின் விபரங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இலங்கையின் ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் புதிய துணைவேந்தரை ஜனாதிபதி நியமிப்பார்.