கருணா இனவாதத்தை தூண்டுதாக குற்றச்சாட்டு

karuna 2
karuna 2

யுத்த காலம் முடிவுற்று தமிழ்- முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்ற நிலையில் இரு இனத்தவரிடையேயும் இனவிரிசல்களை ஏற்படுத்தி மோதல்களை ஏற்படுத்த முயற்சிப்பதாக விநாயகமூர்த்தி முரளிதரன் மீது கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு கடிதம் ஒன்றினூடாக தெரியப்படுத்தியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண தளபதியாக இருந்து செயற்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அண்மைக்காலமாக இனவாத செயற்பாடுகளை தூண்டும் விதத்தில் செயற்படுகின்றார்.

அவர் தமிழ் மக்கள் மத்தியில் முஸ்லிம்களை பிழையாக விமர்சித்து வெறுப்புப் பேச்சுக்களைப் பேசி வருகிறார். இவருடைய செயற்பாடுகளினால் கிழக்கில் இன மோதல்கள் ஏற்படக்கூடிய அச்சம் உருவாகியுள்ளது.

முஸ்லிம் தலைவர்கள் தமிழர்களை குழிதோண்டிப் புதைக்க வேண்டும் எனும் நோக்கத்தில் செயற்படுவதாகவும், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியினை தடுப்பதற்கும், அவர்களை அடக்கி ஆளுவதற்குமே தாம் கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்கின்றோம் எனும் தொனியிலும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்.

அதுமாத்திரமல்ல புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையில் முஸ்லிம்கள் அங்கம் வகிக்காமை தனக்கு பெரும் சந்தோசம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இது அவரது இனவாத்தின் உச்ச வெளிப்பாடாகும்.

முஸ்லிம் சமூகத்திற்கும், மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினருக்கும் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது. இந்த ஆட்சியில் முஸ்லிம்கள் பங்காளிகளாக இருந்து செயற்படுவதற்கும் ஆயத்தமாக உள்ளனர். கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலும் முஸ்லிம்கள் பங்காளிகளாக இருந்து செயற்பட்டுள்ளனர்.

குறிப்பாக இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் தனிநாடு கோரியோ, நாட்டுக்கு எதிராகவோ செயற்பட்ட வரலாறுகள் கிடையாது. அவற்றை கருணா அம்மான் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ் மக்களால் புறக்கணிக்கப்பட்ட அவரிற்கு தமிழ் மக்கள் மத்தியில் எந்தவொரு செல்வாக்கும் கிடையாது. அரசியல் வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு, அரசியல் அதிகாரத்தினைப் பெற்றுக்கொள்வதற்காக தற்போது இனவாதம் பேசுகிறார்.

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இனங்களை ஒன்றினைத்து சகவாழ்வை ஏற்படுத்துவதற்கு உழைக்க வேண்டிய இக்காலகட்டத்தில், கருணா அம்மான் போன்றவர்களின் செயற்பாடுகள் அவற்றுக்கு குந்தகமாக அமைந்துவிடும்.

அராஜகத்துக்கும் வன்முறைக்கும் பழக்கப்பட்ட அவரால் ஜனநாயக நீரோட்டதில் பயணிக்க முடியாமலுள்ளது.

எனவே அவரது நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும். அத்துடன் சமாதானத்தினை குழப்பும் யாராகவிருந்தாலும் தராதரம் பாராது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.