ஈழத்தமிழர்களின் தீர்விற்கான கத்தலோனியாவின் ஆலோசனை

katalonia
katalonia

ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்விக்கான போராட்டத்தை குக்கிராமங்களில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டுமென சுவிஸில் இடம்பெறுகின்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் கத்தலோனிய பிரதிநிதி யோடி விலனோவர் தெரிவித்துள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு சுவிசர்லாந்தில் நவம்பர் 23, 30 மற்றும் டிசம்பர் 01ஆம் திகதிகளில் மூன்று நாட்களாக நடைபெற்றது.

ஸ்பெயின் மைய அரசின் சட்டங்களை கடந்து கத்தலோனிய மக்கள் தமது சுதந்திரத்துக்கான அரசியல் பெருவிருப்பினை குக்கிராமங்கள் தோறும், மக்கள் வாக்குப்பெட்டி என்ற பொறிமுறையினைத் தொடங்கி அது மிகப் பெரும் அரசியல் இயக்கமாக எழுச்சிகொண்டு அரசியல் விருப்பினை பொதுவாக்கெடுப்பும் மூலம் வெளிப்படுத்தியதையும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் ஸ்பெயின் ஜனநாயகம் போல், இலங்கையின் ஜனநாயகம் இல்லை என்றும், ஜனநாயகப்படுத்தப்பட்ட இலங்கையின் அரசியல் வெளியில் கிடைக்கின்ற வாய்ப்புக்களை, பொதுவாக்கெடுப்பினை நோக்கிய மக்கள் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தி, அகலப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுவாக்கெடுப்பிற்கான மக்கள் போராட்டத்தினை கீழிருந்து மேலாக கட்டியெழுப்ப வேண்டும் எனவும் அவர் இதன் போது மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கத்தலோனியாவின் பொதுவாக்கெடுப்புக்கான அரசியல் போராட்டம் கட்டியெழுப்பப்பட்டது எவ்வாறு எனும் அனுபவத்தினை அடிப்படையாகக் கொண்டு தனது கருத்தினை பதிவு செய்திருந்தார்.