தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு

மேல் மாகாணத்தில் 71 அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், தனிமைப்படுத்தல் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய செயற்படுவதில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

காவல்துறையினரும், சுகாதாரத்துறையினரும் இணைந்து நேற்று மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் இந்த விடயம் கண்டறியப்பட்டதாக காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

830 அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் நேற்று சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், 759 நிறுவனங்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனிமைப்படுத்தல் சுகாதார விதிமுறைகளை பின்றபற்றாத 71 நிறுவனங்களின் தலைவர்களுக்கு எதிராக, தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், கடந்த 24 மணிநேரத்தில், முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாதமை தொடர்பில் 16 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.

இதன்படி, கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 808 ஆக அதிகரித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.