விவசாய உற்பத்திகளை அதிகரிக்குமாறு பணிப்பு

press release
press release

எமது நாட்டில் பயிரிடக்கூடிய உணவுப் பயிர்களை பயிரிட்டு உணவுப் பொருட்களை எமது நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியுமாக இருந்தால் நாட்டில் ஏற்படுகின்ற பாரிய அந்நிய செலவானிகளை குறைத்துக்கொள்ள முடியும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் மொஹான் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்;

எமது நாட்டில் பயிரிடக்கூடிய உணவுப் பயிர்களை பயிரிட்டு, அவற்றிற்கு பெறுமதி சேர்த்து தேசிய உணவுப்பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், தரமான உணவுப் பொருட்களின் வழங்கலை அதிகரிப்பதற்கும் பெறுமதி சேர்க்கக்கூடிய விவசாய உற்பத்திகள் என்ற வகையில் இலங்கையின் தரச் சின்னத்துடன் ஏற்றுமதி செய்யவும் எமக்கு முடியும்.

சீனி, பால்மா, கோதுமை, வாசனை திரவியங்கள், மரக்கறி எண்ணெய், தானிய வகைகள், விலங்குணவுகள் மட்டுமன்றி அன்றாடம் பயன்படுத்தும் கிழங்கு, செத்தல் மிளகாய், பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், பயறு, உழுந்து, குரக்கன் போன்றவைகளும் வருடாந்தம் எமது நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.

அது மட்டுமன்றி மஞ்சல், புளி, தர்ப்பூசனி பழம், மாசி, நெத்தலி போன்ற பொருட்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இத்தகைய இறக்குமதிக்காக நாம் வருடாந்தம் 1781 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடுவதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 289532 மில்லியன் ரூபாவாகும்.

மேற்குறிப்பிடப்பட்ட உணவுப் பொருட்களை எமது நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியுமாக இருந்தால் இவ்வளவு பெரிய அந்நியச் செலாவணியை செலவிட வேண்டிய தேவை இருக்காது.

இந்த உணவுப் பயிர்களை நாட்டில் உற்பத்தி செய்தால் எமது விவசாய சமூகத்திற்கு பாரிய வருமானம் கிடைப்பதுடன், அவற்றிற்கு பெறுமதி சேர்த்து கைத்தொழில் துறைகளின்மூலம் பெருமளவு தொழில் வாய்ப்புகளையும் கிராமப்புறங்களில் உருவாக்க முடியும்.

2019 / 2020 பெரும்போக காலம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இதற்குத் தேவையான சிறந்த காலநிலையும் போதுமான மழைவீழ்ச்சியும் கிடைக்கப்பெற்று வருகின்றது. அனைத்து நீர்த்தேக்கங்களும் நிரம்பியுள்ளன. நீர்ப்பாசனம் கிடைக்கின்ற, கிடைக்கப்பெறாத காணிகளில் தற்போது நெற் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது.

சோளம், பயறு, கௌப்பி போன்ற ஏனைய பயிர்களையும் பயிரிட முடியுமான ஒவ்வொரு போகத்தின்போதும் பயிரிட்டு தேசிய பொருளாதாரத்தில் விவசாய உற்பத்தியை அதிகரித்து நாட்டிலிருந்து வெளிச் செல்லும் அந்நியச் செலாவணியை எமது நாட்டின் விவசாய சமூகத்தினது வருமானமாக மாற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என தெரிவித்துள்ளார்.