தமிழர்களின் பூர்வீக இடங்களை நிராகரிக்கின்ற தொல்பொருள் செயலணியில் புதிதாக நியமனம் பெற்றவர்களை ஜனாதிபதி மீள்பரிசீலணை செய்யவேண்டும். மு.கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் வேண்டுகோள்

images 1 4
images 1 4

தமிழர்களின் பூர்வீக இடங்களை நிராகரிக்கின்ற தொல்பொருள் செயலணியில் புதிதாக நியமனம் பெற்றவர்களை ஜனாதிபதி மீள்பரிசீலணை செய்யவேண்டும்.

பௌத்த மத குருக்களால் தமிழர்களின் பாரம்பரியத்தை நிராகரிக்கின்ற சூழலில் தொல்பொருள் செயலணிக்கென மீண்டும் மீண்டும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களையே நியமனம் செய்துள்ளதை மீள்பரிசீலணை செய்யுமாறு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், ஈ.பி.ஆர்.எல்.எப், பத்மநாபா மன்றம், இரா.துரைத்தினம் ஜனாதிபதியிடம் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், ஈ.பி.ஆர்.எல்.எப், பத்மநாபா மன்றம், இரா.துரைரத்தினம். இன்று புதன்கிழமை (11) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்திற்காக உருவாக்கப்பட்ட தொல்பொருள் செயலணியானது 2020யூன்மாதம் 1ம் திகதி அன்று உருவாக்கப்பட்டது. இதில் தெரிவு செய்யப்பட்ட அனைவரும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள்.

இச்செயலணி கிழக்குமாகாணத்திற்கென தெரிவு செய்யப்பட்டுள்ளதால் கிழக்குமாகாண விகிதாசாரத்திற்கு ஏற்றவாறு பெரும்பான்மையான தமிழர்கள் தெரிவு செய்யப்பட வேண்டுமென மக்கள் பிரதிநிதிகளும், இவ்விடயத்தில் அக்கறை உடையவர்களும், அரசின் ஆளும்தரப்பைச் சேர்ந்த அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா. அமைச்சர் ச.வியாழேந்திரன் ஆகியோர் தமிழர்களை தெரிவு செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஓய்வூதியம், இடமாற்றம் பெற்று சென்றவர்களுக்குப் பதிலாகவும் மேலும் புதிதாக ஐந்து பேர் பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த சிங்களவர்கள் மட்டும் தெரிவுசெய்யப்பட்டு வர்த்தமானி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இத் தொல்பொருள் செயலணியில் புத்தசாசன அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்த்தன, தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் மூத்த பேராசிரியர் அனுர மானதுங்க, காணி ஆணையாளர் நாயகம் கீர்த்தி கமகே, சிவில்பாதுகாப்பு திணைக்களப் பணிப்பாளர் மேஜர்ஜெனரல் ஆர்.டி.நந்தனாசேனதீர, கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அசின்சல சேனவிரத்ன ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந் நியமனங்களைப் பொறுத்தவரையில் இனவாத அரசின் ஜனாதிபதி தொடக்கம் சாதாரண மக்கள் பிரதிநிதிகள் வரையும், பௌத்தமத குருமார்கள், அரசபடையினர் போன்றோர்கள் இந் நாட்டை பௌத்த நாடாக மாற்றுவதற்கும் பௌத்த கொள்கைகளை அமுலாக்குவதற்கும் அரச படைகள் தொல்பொருள் உள்ள இடங்களை பார்வையிட்டு பௌத்தத்திற்கான புனித இடங்கள் எனக்கூறும் போது தமிழர்களாகிய நாங்கள் தமிழர்களுக்குரிய புராதான அடையாளங்களை விட்டுக் கொடுப்பதற்கு எச் சந்தர்ப்பத்திலும் துணை போக முடியாது.

தொல்பொருள் செயலணியில் தமிழர்களையும் நியமிக்க வேண்டுமென ஆளும் தரப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் அமைச்சர்கள் கூறியதைக் கூட ஏற்றுக் கொள்ளாதவர்கள் எவ்வாறு தமிழர்களின் தொல்பொருள் இடங்களை பாதுகாப்பார்கள்.

எனவே தமிழர்களாகிய நாங்கள் பல தசாப்தங்களாக எமது அடையாளச் சின்னங்களை, எமது அடையாளங்களை, தொல்பொருள் கலாசார பண்பாட்டை பாதுகாக்க முடியுமோ பாதுகாத்து வருகின்றோம். இதை எதிர்காலத்திலும் பாதுகாப்பதற்கு திடசங்கற்பம் பூணுமாறு அறைகூவல் விடுக்கின்றேன்.

இத்தோடு மாவட்டத்திலுள்ள அரச சார்புள்ள அமைச்சர்களை தொல்பொருள் தொடர்பாக உங்களை நீங்கள் பரிசீலனை செய்யுமாறும், தமிழர்களின் நலன் தொடர்பாக பொதுவான விடயங்களில் சில இணக்கப்பாட்டுடன் செல்வதற்கு அணிதிரளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.