வவுனியா நகரசபை வாயிலில் மனிதச்சங்கிலி போராட்டம்

DSC03506
DSC03506

வவுனியா நகரசபையின் ஊழியர்கள் சிலர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நகரசபை நிர்வாகத்திற்கு எதிராக கடந்த சிலநாட்களாக சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா நகரசபையின் பொது நூலகத்தில் பணியாற்றி வந்த புதிய அரச பொது ஊழியர்சங்கத்தின் செயலாளர்
க.கோல்டன் மற்றும் ஏனைய சில ஊழியர்களே தங்களுக்கு நகரசபை நிர்வாகம் அநீதி இழைத்துள்ளதாக தெரிவித்து சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் பொங்குதமிழ் தூபி நேற்றையதினம் நகரசபையால் முட்கம்பியை கொண்டு அடைக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களால் மனித சங்கிலி போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்கள்,

இவர்களிற்கு அநீதி இளைக்கப்பட்டதன் மூலம் தொழிலாளர்களின் உரிமைகளும் உணர்வுகளும் நசுக்கப்பட்டுள்ளது. இவர்களை தூபிக்குள் வைத்து முட்கம்பியால் அடைக்கும் அதிகாரத்தை மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை கொண்ட, நகரசபைக்கு யார் வழங்கியது. இதனை காவற்துறையினரோ இராணுவமோ செய்திருந்தால். இன்று நிலமை என்னவாகியிருக்கும். எத்தனை பேர் இதில் தி்ரண்டிருப்பார்கள்.

பலவருடங்கள் உழைத்த ஊழியர்களின் உரிமைகளை இவர்கள் எதற்காக நசுக்குகிறார்கள். இவர்கள் ஊழியர்களை அடக்குவதற்காகவா பதவிகளை வகித்துவருகின்றனர். மக்களுக்காக சேவையாற்ற அரசாங்கம் நியமித்தால் இவர்கள் அராயகத்தையே செய்கிறார்கள். எனவே ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக தீர்க்கப்படும் என்றனர்.

இது தொடர்பாக நகரசபை தவிசாளர் இ.கௌதமனிடம் கேட்டபோது, இது பொதுவான பிரச்சனை இல்லை. தனிப்பட்ட ஒருவரின் பிரச்சனையே.அவரது நியமனத்திற்கமையவே அவருக்கான வேலை வழங்கப்பட்டது. இந்த போராட்டம் எமது ஊழியர்களிற்கும் உத்தியோகத்தர்களிற்கும் அசௌகரியத்தையும் அவமானத்தையுமே ஏற்ப்படுத்தியுள்ளது.

போராட்டம் என்றுகூறிவிட்டு பொங்குதமிழ் தூபிக்குள் குடித்து விட்டு முகம் சுழிக்கும் விதமான செயற்பாடுகளை மேற்கொண்டமையாலே அதனை முட்கம்பியால் அடைத்திருந்தோம். இப்படியான கீழ்த்தரமான வேலையை தூபியில் செய்வதற்கு தலைவர் என்றவகையில் இடமளிக்க முடியாது. இது ஒரு பிழையான போராட்டம் என்றார்