இந்திய கம்யூனிஸ்ற் கட்சி தலைவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தார் ஸ்ரீகாந்தா!

srikantha CI
srikantha CI

இந்திய கம்யூனிஸ்ற் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னால் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், பிரபல தொழிற்சங்க வாதியும் ஆற்றல் மிக்க பேச்சாளரும், எழுத்தாளருமான மதிப்புக்குரிய தா. பாண்டியன் அவர்கள் இயற்கை எய்திய செய்தி அவரை அறிந்திருந்த அனைத்து இலங்ழகத் தமிழ் மக்களுக்கும் கவலை அளித்துள்ளது என்று தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்….

 சட்டவாதியான அவர் இளமைப் பருவத்திலிருந்தே மக்கள் சேவைக்கு தன்னை அற்பணித்திருந்தார். உதாரணமாக காட்டப்படக் கூடிய ஓர் பொது உடைமை வாதியாக தன் இறுதிவரையில் அவர் திகழ்ந்தார். 1991ல் முன்னாள் இந்திய பிரதமர் ராஜிப் காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் படுகாயமடைந்து, மரணமடைந்து விட்டார் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும் அதிசயமாக உயிர் பிழைத்து, பல மாதங்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று மீண்டெழுந்த பாண்டியன் அவர்கள், இலங்கைத் தமிழ் மக்கள் மீது தொடர்ந்து காட்டி வந்த பரிவும் பாசமும் மறக்கப்பட முடியாதவை.

இலங்கை அரசுக்கும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் நிகழ்ந்த நீண்ட நெடும் போரின் இறுதிக்கட்டத்தில், 2008ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 2ம் திகதி, மகாத்மா காந்தியின் பிறந்த நாளில், பாண்டியன் அவர்களின் அறைகூவலோடு தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில் நடாத்தப்பட்ட அனைத்துக் கட்சி உண்ணாவிரத போராட்டமே, ஒட்டுமொத்த தமிழ் நாட்டையும் யுத்த நிறுத்தக் கோரிக்கையின் பின்னால் அணிதிரள வைத்தது என்பதனை நாம் அனைவரும் நன்றியுடன் நினைவு கூருகின்றோம்.

 நீதி கோரி நிற்கும் எமது மக்களை தனது உற்றாரும் உறவினருமாக கருதி அவர் நேசித்ததை எங்களில் சிலர் நேரடியாகவே நன்கறிவோம். அவருடன் நெருங்கிப் பழகிய அந்த நாட்கள் மறக்கப்பட முடியாதவை. மனித நேயம் மிக்க உயர்ந்த பண்பாளராகவும் துணிச்சல் மிக்க அரசியல் போராளியாகவும் வாழ்ந்து மறைந்த பாண்டியனின் கம்பீரக் குரல் ஈழத்து மண்ணில்இனிய இலக்கிய சுவையோடு ஆழமான அரசியல் சிந்தனைகளையும் நாற்பது ஆண்டுகளிற்கு முன்னரே எமது மக்களிற்கு சொல்லிச் சென்றதையும் இன்று நினைத்துப் பார்க்கின்றோம். அந்த செந்தமிழன் இன்று இல்லை. தொற்று நோய் சூழ்நிலையின் தடைகளினால் அவரின், இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள இயலாத நிலைமையில் உணர்வு ரீதியாக எமது அஞ்சலிகளை அந்த மாமனிதருக்கு சமர்ப்பிக்கின்றோம் எனவும் குறிப்பிட்டார்