போகுந்தர பொருளாதார மத்திய நிலையத்திற்கு தற்காலிக பூட்டு!

unnamed 1 1
unnamed 1 1

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 13 பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்ட போகுந்தர பொருளாதார மத்திய நிலையத்தில் அனைத்து வர்த்தகர்களுக்கும் இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம்,நாட்டில் நேற்றைய தினம் 5 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதன்படி நாட்டில் கொவிட்-19 தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 489 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிக்கையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உஸ்ஸாபிடிய பகுதியை சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவர் கடந்த மாதம் 22 ஆம் திகதி கண்டி பொது மருத்துவமனையில் வைத்து உயிரிழந்தார்.

குருதி நஞ்சானமை மற்றும் கொவிட் 19 நியுமோனியா நிலைமையே அவரது மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கிரியுல்ல பகுதியை சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவர், நேற்று உயிரிழந்தார்.

கொவிட் 19 நியுமோனியா மற்றும் பல உறுப்புக்கள் செயலழிந்தமையே அவரது மரணத்திற்கான காரணமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொலன்னாவ பகுதியை சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வைத்து கடந்த 2 ஆம் திகதி உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் இதய நோய் நிலைமை, கொவிட் 19 நியுமோனியா மற்றும் சிறுநீரகம் மோசமாக பாதிக்கப்பட்டமையே என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மட்டக்குளி பகுதியை சேர்ந்த 62 வயதுடைய பெண் ஒருவருக்கு கொழும்பு தேசிய மருத்துமனையில் வைத்து கொவிட்-19 தொற்று கண்டறியப்பட்டது.

இதனையடுத்து அவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பட்டிருந்தார்.

எனினும் கடந்த முதலாம் திகதி அவர் உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்-19 தொற்று மற்றும் சுவாசத் தொகுதி செயலிழந்தமையே என கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, பொரலஸ்கமுவ பகுதியை சேர்ந்த 70 வயதுடைய பெண் ஒருவருக்கு மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் வைத்து கொவிட் 19 தொற்று கண்டறியப்பட்டது.

இதனையடுத்து அவர், முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

குருதி நஞ்சானமையால் ஏற்பட்ட அதிர்ச்சி, கொவிட் 19 நியுமோனியா, சிறுநீரகம் மோசமாக பாதிக்கப்பட்டமை மற்றும் புற்று நோய் நிலைமை என்பன அவரது மரணத்திற்கான காரணமாகும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.