ரிசாத்தை விமர்சித்த 3 ஊடகங்களுக்கு தடை

download 5 10
download 5 10

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு அபகீர்த்தி ஏற்படும் விதத்தில், பொய்யான மற்றும் வெறுக்கத்தக்க கருத்துக்களை வெளியிடுவதை தடுத்து, கைத் தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு இடைக்கால தடை உத்தரவொன்று நேற்று பிறப்பிக்கப்பட்டது.

அத்துடன் அவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதை தடுக்கும் வகையில், மூன்று இலத்திரனியல் ஊடாக நிறுவனங்களுக்கும் கொழும்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்தது.

கொழும்பு மாவட்ட நீதவான் அருண அளுத்கே இந்த இடைக்கால தடை உத்தரவை, ரிஷாத் பதியுதீன் சார்பில் முன்வைக்கப்பட்ட மனுவை ஆராய்ந்து விதித்ததுடன், எதிர்வரும் 31 ஆம் திகதி மனுவின் பிரதிவாதிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.

ஒரு பில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி, விமல் வீரவன்ச, மற்றும் மூன்று இலத்திரனியல் ஊடகங்களுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றில் மான நட்ட ஈடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி இவோன் நிராஷாவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இம்மனுவில், அவரின் ஆலோசனைக்கு அமைய சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தலைமையில் சிரேஷ்ட சட்டத்தரணி சந்தீப கமஎத்திகே, ரவீனா சில்வா ஆகியோர் அடங்கிய சட்டத்தரணிகள் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் ஆஜராகி நேற்று விடயங்களை விளக்கினர்.

இதன் போது, சிரேஷ்ட சட்டத்தரணி ருஷிதி ஹபீப் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த நீதிவான், எதிர்வரும் 30 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு அபகீர்த்தி ஏற்படும் விதத்தில், பொய்யான மற்றும் வெறுக்கத்தக்க கருத்துக்களை வெளியிடுவதை தடுத்து, இந்த தடையுத்தரவை பிறப்பித்தார்.