ஆடை தொழிற்சாலையில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: ஆடைத் தொழிற்சாலை தொற்றாளர்கள் 36 ஆக அதிகரிப்பு!

samayam tamil 1
samayam tamil 1

வவுனியா ஆடை தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களில் மேலும் 10 பேருக்கு இன்று இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆடைத் தொழிற்சாலை கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் 24 பேர் கடந்த இரு வாரங்களில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டிருந்தனர். இதனையடுத்து குறித்த ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றும் 1800 பேரில் 800 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களிடமும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (16.03) வெளியாகிய நிலையில் ஆடைத்தொழிற்சாலையைச் சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு தொகுதி முடிவுகள் இன்று (17.03) இரவு வெளியாகிய நிலையில் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 36 பேர் தற்போது கொரோனா தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்புடையவர்களை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.