வவுனியாவில் வீதியோரங்களில் வீசப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு!

IMG 0893
IMG 0893

வவுனியாவின் பிரதான வீதியோரங்களில் வீசப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடான நிலை உருவாகியுள்ளதுடன் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கும் உள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக பண்டாரிக்குளம், மற்றும் வைரவபுளியங்குளம் குளக்கட்டு வீதிகள், ஈச்சங்குளம் பிரதான வீதி,
பூதோட்டம் சாந்தசோலை வீதி, கல்வியற்கல்லூரி வீதி, சிதம்பரபுரம் ஆகிய வீதிகளிலும், வடிகான் ஓரங்களிலும் பொதுமக்களால் அதிகப்படியான கழிவுகள் வீசப்பட்டு வருகின்றன.

வீட்டுக்கழிவுகள், மலக்கழிவுகள், கடைக்கழிவுகள், என்பன அப்பகுதிகளில் வீசப்படுவதால் வீதி எங்கும் துர்நாற்றம் வீசுவதுடன், அவ் வீதிகளால் அசௌகரியத்துடனேயே பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அங்கு வீசப்படும் கழிவுகள் ஓடும் நீரினாலும், விலங்குகள், பறவைகளால் காவிச்செல்லப்பட்டு, வீதிகளில் பரவிகிடக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடான நிலமை உருவாகியுள்ளதுடன் தொற்றுநோய் பரவக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதிகளை சேர்ந்த மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இரவு நேரங்களில் வருகைதரும் சில நபர்களே தொடர்ச்சியாக அப்பகுதிகளில் குப்பைகளை வீசி சீர்கேட்டை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து உள்ளூராட்சி சபைகள் கவனம் செலுத்தி கழிவு முகாமைத்துவத்தை சரியானமுறையில் ஏற்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுப்பதுடன், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் கண்காணிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.