வவுனியாவில் விவசாய காணியில் அதிக நீர்வரத்து காரணமாக நெற்செய்கை பாதிப்பு

IMG 1063
IMG 1063

வவுனியா மாதர்பனிக்கங்குளம் பகுதியில் 17 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வரும் பெண் ஒருவர் தனது விவசாயக் காணியில் தேவைக்கு அதிகமாக நீர்வரத்து காணப்படுவதால் தனது நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது என குற்றஞ்சாட்டியுள்ளார்.

வவுனியா மாதர் பனிக்கங்குளம் பகுதியை சேர்ந்த பெண் தலைமைத்துவத்தை கொண்ட த.நாகேஸ்வரி என்ற குடும்ப பெண்ணே மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.

தொடர்ந்து அவர் கருத்து தெரிவித்த போது,

வேதக்கல் குளத்தில் அணைக்கட்டு கட்டப்பட்டு மூன்று போகத்திற்கு அதிகமான தண்ணீரை தேக்கியபடியினால் குளத்தின் பின்பகுதியில் மேலதிகமாக தேங்கும் நீரினால் எனது விவசாய நிலம் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

நீரின் அதிகவரத்து காரணமாக இம்முறை எனது நெற் செய்கையில் ஐந்து ஏக்கர் பயிர்ச் செய்கை முற்றாக
அழிவடைந்துள்ளது.

அரச அதிகாரிகள் இப்பிரச்சினையில் தலையிட்டு எனக்கு பெரும் போகம் மற்றும் சிறு போகம் செய்யும் வகையில் எனது விவசாய நிலத்திற்குள் வரும் நீரை தடுத்து நிறுத்தி தீர்வை பெற்றுத்தர வேண்டும்.

வேதக்கல் குளக்கட்டுமானமானது சின்னக்கிழவிகுளம், பெரியகிழவிகுளம், பாலமோட்டை, பனிச்சங்குளம் ஆகிய நான்கு குளங்களுக்கு வேதக்கல் குளத்திலிருந்து நீர் வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே குளக்கட்டு நிறுவப்பட்டது. ஆனால் குறித்த நான்கு குளங்களுக்கும் நீர் வழங்கப்படுவதில்லை என தெரிவித்தார்.