வாகனேரியில் யானைகளின் தொல்லையால் மக்கள் மிகவும் பாதிப்பு!

08
08

வாகனேரி – பெட்டைக்குளம் கிராமத்தில் நேற்றுமுன்தினம் அதிகாலையும் இரவுமாக இரண்டு நாட்களில் யானைகளின் தொல்லையால் இரண்டு வீடுகள் மற்றும் வீட்டுத் தோட்டங்கள் என்பன சேதமாக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

வாகனேரி கிராம சேவகர் பிரிவில் உள்ள பெட்டைக்குளம் கிராம மக்கள் கடந்த யுத்தகாலத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்கிராமத்தில் 54 குடும்பங்கள் வசித்து வருவதுடன் இவர்களது பிரதான தொழிலாக வீட்டுத் தோட்டம், நண்னீர் மீன் பிடி மற்றும் கூலித்தொழிலாகும்.

தங்களிடம் பொருளாதார வசதிகள் இல்லாததால் வங்கிகளில் கடன்களைப் பெற்று வீட்டுத் தோட்டம் செய்து அறுவடை செய்யும் வேளைகளில் யானைகளின் தாக்குதல்களால் தோட்டங்கள் சேதமாக்கப்படுவதனால் அம் மக்கள் கடன்களை மீள செலுத்துவதில் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் காலங்களில் வந்து யானை வேலிகள் அமைத்து தருவதாக கூறிச் செல்லும் அரசியல்வாதிகள் அதற்கு பிறகு காண்பதற்கு கிடைப்பதில்லை என்றும், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் யானை வேலிகள் அமைப்பதற்காக பல தடவைகள் வந்து பார்வையிட்டுச் சென்றுள்ள நிலையில் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.