தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 5,400 பேருக்கு சட்ட நடவடிக்கை

20A10FA8 BF81 4D84 8215 5EBF158E5250
20A10FA8 BF81 4D84 8215 5EBF158E5250

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய 5,486 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களில் 5,400 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறியமை தொடர்பில் இன்று வியாழக்கிழமை காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 238 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 5,486 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 5,400 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேல்மாகாணத்தில் நேற்று புதன்கிழமை 2,103 நிறுவனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. இதன்போது 3,473 நபர்கள் கண்காணிக்கப்பட்டதோடு அவர்களுள் 7 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல்மாகாணத்தில், களுத்துறை, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளில் அங்காடி விற்பனையாளர்கள் 275 பேர் சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் , அவர்களுள் முகக்கவசம் அணியாது இருந்தவர்களுக்காக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. இவர்களுள் 72 பேர் உடனடி அன்டிஜன் பரிதோனைகளுக்குட்படுத்தப்பட்டனர். எனினும் இதன்போது ஒரு தொற்றாளர்கள் கூட அடையாளம் காணப்படவில்லை என்றார்.