சம்மந்தனின் சமஸ்டி குண்டு பரப்புரையே -சிவசக்தி ஆனந்தன்

2 gg 1
2 gg 1

அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் தானும் தமிழரசுக் கட்சியும் போட்டியிட்டு வெற்றி பெற்று பதவிகளை தக்கவைத்துக் கொள்வதற்காகவே யாழில் சம்பந்தன் சமஷ்டி தீர்வு கிடைக்கும் என்று வெடிகுண்டை வெடிக்க வைத்துள்ளார் என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும், வன்னி மாவட்ட நாடா ளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

யாழிற்கு சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பங்களாகிக் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை நடத்திவிட்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் சர்வதேசத்தின் ஆதரவுடன் தமிழர்களுக்கு சமஷ்டி கிட்டும் என்று கூறியிருக்கின்றமை தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை பேரம்பேசலுடன் பெறுவதற்கு பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்த போதும் அவை அனைத்தையும் கோட்டைவிட்டு கடந்த ஆட்சியாளர்களுடன் சரணாகதியடைந்து விட்டு, நான்கு வருடங்கள் நிஷ்டையில் இருந்து விழித்தவர் போன்று தமிழ் மக்களை ஏமாற்றும் கருத்துக்களை சம்மந்தன் வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை அரசாங்கம் அமுலாக்கத்திற்கு விளைந்திருக்காத சூழலில் கால அவகாசனத்தினை வழங்கியமை, சர்வதேச விசாரணைக்கான நீதிகோரி ஈழத்திலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழ் மக்கள் வீதிக்கிறங்கிய போது சர்வதேச விசாரணை நிறைவடைந்து விட்டதாக அறிவித்தமை, புதிய அரசியலமைப்பு உருவாகின்றது என்று கூறியே நான்கு வருடங்களை கடத்தியமை, புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களின் தமிழ்த் தேசியக் கோட்பாடுகளை உடைத்து ஒற்றை ஆட்சிக்குள்ளான முன்மொழிவை ‘பெயர் பலகை’ அவசியமில்லை என்று கூறி வார்த்தை வர்ண ஜாலங்களைக் காட்டி காலங்கடத்தியமை என்று அடுக்கிக்கொண்டே செல்ல முடியும்.

தமிழர் தாயகமான வடக்கு-கிழக்கு இணைப்பே நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருகின்ற நிலைமையை அறிந்தும் கண்ணயர்ந்திருக்கும் சம்பந்தன் தற்போதைய சூழலில் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினையில் இருந்து அரசியல் தீர்வு வரை இவர்களால் ஒரு துரும்பைக் கூட நகர்த்த முடியாத நிலைக்கு தமிழ் மக்களை நடுத்தெருவில் விட்டுள்ளார்கள் என்று தனது ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார் .