வவுனியா சகாயாமாதாபுரம் பகுதியைச் சேர்ந்த மேலும் 7 பேர் உட்பட 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

202006220903239157 Integrated In Vellore and Thiruvannamalai districts Corona SECVPF 3
202006220903239157 Integrated In Vellore and Thiruvannamalai districts Corona SECVPF 3

வவுனியா, சகாயாமாதாபுரம் பகுதியில் மேலும் 7 பேர் உட்பட 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சிஆர் பரிசோதனையின் முடிவுகள் நேற்று (05) இரவு வெளியாகின.

அதில், வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒமேகா ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒருவருக்கும், சகாயாமாதாபுரம் பகுதியில் ஏழு பேருக்கும், திருநாவற்குளம் பகுதியில் நான்கு பேருக்கும், நெடுங்கேணி சேனைப்புலவு பகுதியில் ஒருவருக்கும், ஆச்சிபுரம் பகுதியில் மூன்று பேருக்கும், மன்னாரைச் சேர்ந்த வவுனியா சிறைச்சாலை கைதிகள் நான்கு பேருக்கும், வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் கடமையாற்றும் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த நான்கு பேருக்கும், இறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த மூன்று பேருக்கும், பெரியஉலுக்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேருக்கும் என 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேவேளை, சனத்தொகை குறைந்த குறித்த சகாயாமாதாபுரம் சிறிய கிராமத்தில் இதுவரை 31 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். குறித்த கிராமத்தில் கோவிட் பரவலை தடுக்கும் வகையில் கிராமத்தில் இருந்து வெளியேறவும், கிராமத்திற்குள் நுழையவும் தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன், கிராமத்தின் பிரதான வீதிகள், உள் வீதிகள் என்பன போக்குவரத்துக்காக தடை செய்யப்பட்டு கிராமத்தைச் சுற்றி பொலிசார் பாதுகாப்பு கடமையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.