பேராயரிற்கு அரசின் மீது நம்பிக்கையிழப்பா?

perayar
perayar

நத்தார் தினத்தில் தெய்வ வழிபாடுகள் நடைபெறும் சகல தேவாலயங்களுக்கும் மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு பேராயர் கர்தினல் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் பேராயரினால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையானது பல்வேறு விவாதங்களை தோற்றுவிப்பதாக தென்படுகிறது.

  • அதாவது பேராயரிற்கு நிகழ்கால அரசின் மீதும் நம்பிக்கை இல்லையா?
  • அல்லது தாக்குதலை மேற்கொண்டிருந்த ஸஹ்ரான் உள்ளிட்ட குழுவினரின் பெயரில் வேறு குழுக்களினால் எதிர்பாராத தாக்குதல் மீண்டும் இடம்பெறுமா? எனும் எண்ணப்பாடுகளை கொண்டிருக்க கூடும்.

பாதுகாப்பு விடயத்தில் தற்போதைய அரசிடம் அதனை வலியுறுத்துவது சிறப்பாக அமையும் எனவும் பேராயர் நினைத்திருக்க முடியும். தன்னை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் விசாரணைக்கு அழைத்துள்ளமையின் காரணமாக அரசின் மீதான நம்பிக்கையிழப்பாகவும் பேராயர் கருதியிருக்க கூடும்.

கடந்த நல்லாட்சி அரசிற்கு தாக்குதல் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்ற போதும் அதனை அலட்சியம் செய்தமையினால் பாரிய உயிரிழப்பினை சந்திக்க நேரிட்டது. எனவே கடந்த அரசினைப் போன்று இவ்வரசும் அலட்சியத்துடன் இருக்க கூடாது எனும் நோக்கில் பேராயர் அரசினை எச்சரிக்கை விடுப்பதாகவும் இதனை குறிப்பிடலாம்.

மேலும் இஸ்லாமிய பயங்கரவாத குழுக்களின் பெயரில் இனம் தெரியாத பல்வேறு குழுக்கள் செயற்படுகின்றமையினால் அவர்கள் ஸஹ்ரானின் பெயரை பயன்படுத்தி மீண்டுமொரு தாக்குதலை மேற்கொண்டு ஸஹ்ராக் குழுக்களின் மீது சுமத்த முற்படலாம். எனவே பாதுகாப்பு விடயத்தில் அரசை மீண்டும் வலியுறுத்துவதாகவும் இதனை நோக்க முடியும்.

இந்நிலையில் தாக்குதல்கள் மீண்டும் மேற்கொள்ளப்படுவதற்கு அதிக வாய்ப்புக்கள் இருக்கலாம் என்ற கருதுகோளின் அடிப்படையில் மேலதிக பாதுகாப்பை வழங்குமாறு அரசாங்கத்திடமும், பாதுகாப்பு அமைச்சிடமும் இந்த பேராயர் கர்தினல் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை வேண்டுகோளை விடுத்துள்ளார்.

குறித்த உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி குற்றம் விளைவித்தவர்களுக்கெதிராக தண்டனை வழங்க வேண்டும் என கடந்த அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை ஆகியோரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் ஆலோசனை வழங்கியது.

உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமை தொடர்பிலான வழக்கு விசாரணையில் முன்னிலையாகிய சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிடர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் இதனைத் தெரியப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.