தமிழ் மக்களின் தீர்வு தொடர்பில் இணக்கத்தைப் பெற முடியும்

angajan
angajan

தமிழ் மக்களின் தீர்விற்கான பேச்சுவார்த்தையை உண்மையாகவும், நேர்மையாகவும் வைத்தால், இந்த ஜனாதிபதியினதும், பிரதமருடைய இணக்கப்பாட்டை பெரும்பான்மை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத்தலைவர் அங்கஜன் ராமநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எந்தவொரு அரசியல் கட்சியாக இருந்தாலும், அரசியல் பிரதிநிதியாக இருந்தாலும், மக்களின் அபிவிருத்தியையும், தீர்வு திட்டத்தையும் முன்வைத்து, இரண்டையும் முன்னுரிமை அடிப்படையில் செயற்படுத்த வேண்டும்.

கடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் கூட எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மிகப் பெரிய வாய்ப்புக்கள் இருந்தன.

அந்த ஆட்சிக் காலத்தை முழுமையாக வீணடித்துவிட்டோம். இறுதியாக எமக்கு தீர்வும் கிடைக்கவில்லை. அபிவிருத்தியும் கிடைக்கவில்லை. மக்கள் இருந்த நிலமையை விட்டு, இன்னும் கீழ் நிலைக்குப் போவதைக் கண்டுள்ளோம். இனியும் அவ்வாறு நடக்காது.

தீர்வு கிடைத்ததன் பின்னர் தான் அபிவிருத்தி என்று சொல்லும் போது, எமது மக்களின் இருப்பு கேள்விக்குறியாகின்றது. அதன் போது அந்த தீர்வை யார் அனுபவிக்கப் போகின்றார்கள் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது.

தீர்வு எந்தளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு எமது மக்களின் முன்னேற்றமும் முக்கியம். எந்த அரசாங்கம் வந்தாலும், எமது இரண்டு விடயங்களையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்பதே எனது எதிர்பார்ப்பு.

இது தொடர்பில் அரசாங்கத்துடன் நியாயமான வகையில் பேச்சுவார்த்தை இடம்பெறுகின்ற வேளையில் அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டு பெரும்பான்மை மக்களும் அதனை ஏற்றுக்கொள்ள முற்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.