சிங்களவர் வெட்கப்பட வேண்டும் என்கிறார் கல்வி அமைச்சர் டலஸ்

dalas 1
dalas 1

தமிழ் மொழி தெரியாமல் இருப்பதை நினைத்து சிங்கள மக்கள் வெட்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கல்வியமைச்சில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“ சுதந்திரத்திற்குப் பின்னர் 72 ஆண்டுகள் அரசியல் வரலாற்றைக் கொண்டிருக்கும் நாங்கள் இன்னமும் ஒருவருக்கொருவர் சகஜமாக பேசமுடியாமல் இருப்பது வெட்கப்பட வேண்டியிருக்கிறது.

மொழிப்பயன்பாட்டின் போது வேறு மொழி பேசுபவர் வருத்தம் கொள்ளும் அளவிற்கு நாட்டில் நிலமை ஏற்பட்டிருக்கிறது. சினிமா, கலாசாரம், இலக்கியம் போன்று அனைத்திலும் இதேபோன்றதொரு நிலைமை இருக்கிறது. இது மாற வேண்டுமாயின் பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

சிறுபான்மையினர், வேறு மதத்தவர்கள் என்னும் சொற்பிரயோகங்களை அனுமதிக்க முடியாது. 45 இலட்சத்திற்கும் அதிகளவான சிறுவர்கள் நாட்டில் இருக்கிறார்கள். வயது முதிர்ந்தவர்களின் மனநிலையில் மாற்றங்களைக் கொண்டுவர முடியாது. ஆனால் அடுத்த தலைமுறையினரிடையே மாற்றத்தைக் கொண்டுவர முடியும். அதற்காக இரு மொழிக் கொள்கையில் நாம் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

இலயங்கையில் 21 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டிருக்கிறோம். இரு மொழிகளைக் பேசுகிறோம். ஆனால் தமிழ் பேசுபவருக்கு சிங்களம் தெரியாது, சிங்களம் பேசுபவருக்கு தமிழ் தெரியாது. இது வெட்கப்பட வேண்டிய விடயமாக இருக்கிறது. இதில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

உலகில் மற்றைய நாடுகள் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்வதற்கான ரகசியம் என்னவெனில், அவர்கள் ஒரு தேசம் என்னும் கொள்கையில் பயணிக்கிறார்கள். அதேபோன்றதொரு நிலை ஏற்படுமாயின் எங்கள் தேசமும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் ” எனக் கூறியுள்ளார்.