உருமாறிய கொரோனா வைரஸே மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வரத்தடைக்கு காரணம்

airport 1
airport 1

வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த நூற்றுக்கும் அதிகமானோருக்கு கடந்த வாரம் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பல்வேறு நாடுகளிலும் வெவ்வேறு உருமாறிய வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதால் நாட்டு மக்களின் நலன் கருதியே மத்திய கிழக்கு உள்ளிட்ட மேலும் நாடுகளிலிருந்து பயணிகள் வருவதற்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் , கொவிட் கட்டுப்படுத்தல் தொடர்பில் வாராந்தம் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெறும். இதன் போது நாட்டில் 65 வீதமானோருக்கு தடுப்பூசி வழங்குதல் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள போதிலும் , பல நாடுகளிலும் நிலைமாறிய வைரஸ் பரவல் தீவிரமாக அதிகரித்து வருகிறது. இவ்வாறு நிலைமாறிய வைரஸ் பரவல் அபாயத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

அதற்கமைய நாளை மறுதினமான முதலாம் திகதி முதல் 6 மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருவதற்கு தடை விதித்துள்ளதாக சிவில் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூலை 13 ஆம் திகதி வரை இந்த தடை நடைமுறையிலிருக்கும். கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், சவுதிஅரேபியா, ஓமான், பஹரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து வருவதற்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.