அனுரகுமாரவை ஆதரிக்க வேண்டுகோள்: தேசிய மக்கள் சக்தி இயக்கம்.

IMG 2104
IMG 2104

வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு சுயநிர்ணைய உரிமையுடன் கூடிய தீர்வு முன்வைக்கப்படும் என்று தெரிவித்துள்ள தேசிய மக்கள் சக்தி இயக்கத்தினர் இதற்காக ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்கவை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

யாழ்.ஊடக அமையத்தில் தேசிய மக்கள் சக்தி இயக்கத்தினர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றினை நடத்தியிருந்தார்கள். இதன் போது கருத்து வெளியிடும் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:-

கடந்த கால அரசியல் கட்சிகளின் ஆட்சியில் ஏற்ப்பட்ட ஏமாற்றமே இந்த தேசிய மக்கள் சக்தி இயக்கம் உருவாக்க காரணமாக இருந்தது. தேசிய மக்கள் சக்தியினால் நாட்டில் அனைத்து மக்களுக்குமான வரைபு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த வரைபு ஜனாதிபதி தேர்தலுக்கு மட்டும் உருவாக்கவில்லை. இறுதியான வரைபும் இல்லை.

நாட்டில் அனைத்து மாகாணங்களில் உள்ள மக்களுடன் பேசி அடிப்படை பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கான திட்டங்களும் அந்த வரைபில் இணைத்துக் கொள்ளப்படும். இறுதியாக முழுமையான திட்டமாக மாற்றப்படும். பல கட்சிகளை ஆராய்ந்தோம். யாருடன் சேர்ந்து சமூக நீதிக்காக வேலை செய்யலாம் என்று பார்த்தோம். இதன் பயனாக தேசிய மக்கள் சக்தியில் இணைந்தோம்.

அரசியலில் 3 ஆவது பாதை தேவை என்பதை யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களும் ஏற்கின்றார்கள். முற்போக்கு சிந்தனை உள்ள தமிழ் மக்கள் எங்களுடன் கைகோர்க்க வேண்டும். நாட்டு மக்கள் மாற்றத்தை விரும்புகின்றார்கள். கடந்த 18 ஆம் திகதி கோட்ல் பேஸில் 1 இலட்சம் மக்கள் மத்தியில் வைத்து அனுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி வேட்பாளராக அறிமுகம் செய்துள்ளோம்.

நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கு பொதுவான பிரச்சினைகள் உள்ளது. ஆனாலும் தமிழ் மக்களுக்கு தனிப்பட்ட பிரச்சினை உள்ளதை 100 வீதம் ஏற்கின்றோம். பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களை மீளவும் இணைத்து சமஸ்ரி முறையிலான அதிகார பரவலாக்கத்துடன், கூடிய சுயநிர்ணைய உரிமையுடன் கூடிய தீர்வினை பெற்றுத்தர நாங்கள் முயட்சிப்போம்.
இது தொடர்பான அழுத்தங்களை இப்போதே ஜே.வி.பியிடம் கொடுக்க ஆரம்பித்துவிட்டோம் என்றனர்.