சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு தடுப்பூசி வழங்குமாறு கோரிக்கை

GHMC
GHMC

வடமாகாண உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் சுத்திகரிப்பு தொழிலாளர்களிற்கு உடனடியாக கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்சங்கம் மற்றும் பசுமைத்தொழிலாளர் நலன்புரி கூட்டுறவுசங்கம் ஆகியன கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் வடமாகாண உள்ளூராட்சி மன்றங்களின் இணைப்பாளர் ராமு சூரியகுமார், பசுமை தொழிலாளர் நலன்புரி கூட்டுறவு சங்க தலைவர் சீராளன் இமானுவேல், ஆகியோர் இணைந்து இன்று அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சுத்திகரிப்புத் தொழிலாளர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி ஏற்றப்படவில்லை என்ற குறைபாடு தொடர்ச்சியாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் ஊழியர்களிற்கு கொவிட் – 19 பரவக்கூடிய அபாய நிலை காணப்படுகின்றது.

எனவே தடுப்பூசியினை முதன்மைப்படுத்தி ஏற்றுவதன் மூலம் அவர்களுடைய உயிராபத்து பாதிப்பு குறைவதுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

சுத்திகரிப்பு பணியாளர்கள் தமது பணிகளை அர்ப்பணிப்புடன் செய்துவரும் இந்நிலையில் அவர்களுக்கு தடுப்பூசியினை முதன்மைப்படுத்தி ஏற்றுவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு தொடர்புடைய அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்