வடக்கு மீனவர்களின் அழிவை அரசாங்கம் வேடிக்கை பார்க்கின்றது – கஜேந்திரகுமார்

gajendrakumar 400
gajendrakumar 400

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி செயற்பாடு காரணமாக வடக்கு மீனவர்களுக்கு மிகப்பெரிய சொத்தழிப்பு இடம்பெற்றுள்ளதாகவும், மறுபுறம் கடலட்டை பண்ணைகளை உருவாக்கி எமது கடல் வளங்களை அழிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சபையில் சுட்டிக்காட்டிய அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அரசாங்கம் திட்டமிட்டே வடக்கின் அழிவுகளை வேடிக்கை பார்ப்பதாகவும் குற்றம் சுமத்தினார்.

அவர் மேலும் கூறுகையில், ஆசிரியர் சங்கத்தின் போராட்டங்கள் நியாயமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அவர்கள் உடனடியாக சம்பள அதிகரிப்பை கேட்கவில்லை, சுபோதினி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது. ஆனால் அவர்களின் கோரிக்கை நியாயமற்றது எனவும், நாட்டின் பொருளாதார நிலைமையில் இதனை கேட்பது மோசமானதென கூறுவதும் தவறானது. அவர்கள் உடனடியாக தமது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என கூறவில்லை.

அதேபோல் வடக்கு கிழக்கின் மீனவர்கள் இன்று பாரிய நெருக்கடி நிலையொன்றை எதிர்கொள்ளும் நிலையொன்று ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு மீனவர்களின் ஆக்கிரமிப்பு காரணமாக எமது மீனவர்களின் சொத்துக்கள் அழிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 22 ஆம் திகதியில் இருந்து சில தினங்களாகவே இந்திய மீனவர்கள் எமது கடல் எல்லைக்குள் நுழைந்து எமது மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தியுள்ளனர். மன்னார், முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் கடல் பரப்பில் இவ்வாறான அழிவுகள் இடம்பெற்றுள்ளன. 27 மீனவர்களின் சொத்துக்கள் இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 277 மீன் வலைகளும் அழிக்கப்பட்டுள்ளன. இதனால் மொத்தமாக நான்கு மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் நாசமாகியுள்ளது.

எனவே எமது மக்களுக்கு வாழ்வாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.