மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்காக 69 கோடி ரூபா ஒதுக்கீடு

photo
photo

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படுகின்ற 14 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட 345 கிராமங்களை உள்ளடக்கிய வகையில் அதன் எதிர்கால அபிவிருத்தி பணிகளுக்காக 69 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவர் வியாழேந்திரன் தலைமையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த வியாழேந்திரன் அவர்கள்,

நாட்டில் புதிய அரசாங்கத்தினால் பல மக்கள் சார்ந்த அபிவிருத்திப் பணிகள் பல முன்னெடுக்கப்படுவதாகவும் அதன் ஒரு கட்டமாக கிராமம் சார்ந்து உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் இடம்பெறவுள்ளதாவும், இது தொடர்பாக அனைத்து பிரதேச செயலாளர் பிரிவிற்கும் சுற்று நிரூபம் அனுப்பி வைக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதற்காக தலா 69 கோடி ரூபா நிதிவரை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மாத்திரம் கிடைக்கப்பெற இருப்பதாகவும் அதனடிப்படையில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிற்கும் தலா இரண்டு மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.

குறித்த அபிவிருத்திப் பணியின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 14 பிரதேச செயலகத்திற்குட்பட்ட 345 கிராமங்களுக்கான எதிர்கால அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும் இருப்பதாகவும், இந்த அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் கிராமம் சார்ந்த விசேட குழு நியமிக்கப்பட வேண்டும் எனவும் வர இருக்கின்ற தினங்களில் 14 பிரதேச செயலகங்களுக்கும் தான் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு அனைத்து கிராம அமைப்புக்களுடனும், அரச உத்தியோகஸ்தர்களுடனும் கலந்துரையாடல் மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த அபிவிருத்திப் பணியின் போது சம்பந்தப்பட்ட அரச உத்தியோகஸ்தர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்த அபிவிருத்திப் பணிகள் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிராமங்களும் உள்வாங்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தின் போது கடந்த கால வெள்ள அனர்த்ததின் போது பொறுப்புடன் செயற்பட்ட அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கும், முப்படையினருக்கும் மக்களுக்கான களப்பணிகளை சிறந்த முறையில் முன்னெடுத்தமைக்காக தொண்டு நிறுவனங்களுக்கும் விசேட நன்றியினை தெரிவித்தார்.