இனரீதியிலான முறுகலுக்கு வழிவகுக்கும் – கீதம் இசைப்பு

3 der
3 der

சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசியகீதம் இசைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையானது, நாட்டில் மீண்டும் இனரீதியிலான முறுகலுக்கு வழிவகுக்கும் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் வலியுறுத்தினார்.

இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் 72ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் அறிவித்துள்ளார்.

இதனை வன்மையாகக்கண்டித்து நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “காலனித்துவ பிடிக்குள் இருந்து இலங்கைக்கு விடுதலை பெற்றுக்கொடுப்பதற்காக தமிழ், முஸ்லிம், சிங்களம் என அனைத்து இன மக்களும் ஓரணியில் திரண்டு போராடினார்கள். இன, மத, குல பேதங்களுக்கு அப்பால் தேசம் மீதான பற்றை முன்னிலைப்படுத்தியே சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றனர்.

1949ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின விழாவில் இரு மொழிகளிலும் தேசியகீதம் இசைக்கப்பட்டது. எனினும் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக அந்த நடைமுறை காலப்போக்கில் மாற்றியமைக்கப்பட்டு, சிங்கள மொழிக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டது.

இனவாதம், மதவாதம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி அரசியல் நடத்தப்பட்டதால் இனங்களுக்கிடையில் முறுகல் ஏற்படவும் தொடங்கியது. குறிப்பாக சிங்கள மொழி திணிப்பு, மத ஆக்கிரமிப்பு போன்ற செயற்பாடுகளால் ஐக்கியமாக வாழ்ந்த மக்கள், இன குழுக்களாக பிரிந்துநின்று செயற்படவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இனரீதியாக, மொழிரீதியாக பிரிந்திருந்த மக்களை ஐக்கியப்படுத்தும் நடவடிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஈடுபட்டது.

இதன்ஓர் அங்கமாக 2016இல் நடைபெற்ற சுதந்திரதின நிகழ்வில் இரு மொழிகளிலும் தேசியகீதம் இசைக்கப்பட்டது. இறுசியாக நடைபெற்ற 71ஆவது சுதந்திர தின நிகழ்விலும் அதே நடைமுறை பின்பற்றப்பட்டது.

எனினும் தற்போது ஆட்சிமாற்றம் ஏற்பட்டு அதிகாரம் ராஜபக்ஷக்களின் கைகளுக்குள் சென்றுள்ள நிலையில், மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு அரசியல் நடத்துவதற்கு முயற்சிக்கின்றனர். இதன் ஓர் அங்கமாகவே தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை பார்க்கவேண்டியுள்ளது.

இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டியது ஜனாதிபதிக்கான பிரதான பொறுப்புகளுள் ஒன்றாகும். ஆனால், அடுத்த பொதுத் தேர்தலில் சிங்கள, பௌத்த வாக்குகளை முழுமையாக வேட்டையாடும் நோக்கிலேயே அவர் தலைமையிலான அரசாங்கத்தின் அரசியல் நகர்வுகள் அமைந்துள்ளன. இதன் காரணமாகவே பேரினவாதிகளை திருப்திபடுத்துவதற்காக தமிழிழ் தேசிய கீதம் இசைக்க தடை விதித்துள்ளனர்.

இந்த தீர்மானத்தை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். வன்மையாகக் கண்டிக்கின்றோம். இருமொழிகளிலும் இசைக்குமாறு வலியுறுத்துகின்றோம். இது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்பவுள்ளோம்.

தென்னாபிரிக்கா, கனடா உட்பட மேலும் சில நாடுகளில் பல மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்படுகின்றது. இதன் காரணமாகவே அந்நாடுகளில் நல்லிணக்கம் வலுப்பெற்றுள்ளது. ஆகவே, சிங்கள மொழியில் மட்டும் தேசியகீதம் இசைப்பதற்கு எடுத்த முடிவை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யவேண்டும்.’ என்றுள்ளது.