வட கிழக்கிற்கு வெளியிலும் கூட்டமைப்பு போட்டியிடுகிறது?

senathirasa
senathirasa

எதிர்வரும் பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய வெளி இடங்களில் போட்டியிடுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலித்துள்ளது. அதனடிப்படையில் எந்தெந்த மாவட்டங்களில் போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்னும் சில தினங்களில் உத்தியோபூர்வமாக இறுதி முடிவை அறிவிக்க உள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான கூட்டத்தினையடுத்து இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்..

வடக்கு கிழக்கிற்கு வெளியில் எதிர்கால தேர்தல்களில் போட்டியிடுவது தொடர்பாக அடுத்தவாரம் நாடாளுமன்றம் கூடியதன் பின்னர் கொழும்பில் 3ம் திகதி நடக்கவுள்ள கூட்டத்தில் இறுதி முடிவை அறிவிப்பது தொடர்பான தீர்மானத்தினை எடுத்துள்ளோம்.

வடக்கு கிழக்கில் எந்தெந்த மாவட்டங்களில் போட்டியிடுவது என்பது பற்றியும்அடுத்த கூட்டத்தில் தீர்மானிக்கவுள்ளோம். இதேவேளை தமிழரசுக் கட்சியின் ஆரம்ப காலங்களில் நாங்கள் புத்தளம், சிலாபம் போன்ற இடங்களில் கூட கூட்டமைப்பு போட்டியிட்டதாகவும் தெரிவித்தார்.

வெளி மாவட்டங்களில் போட்டியிடுவது தொடர்பில் கொழும்பில் இருக்கின்ற கூட்டமைப்பின் அல்லது தமிழரசுக் கட்சியின் கிளை அமைப்புக்களுடன் பேசி எங்கெங்கு வாக்குகளை அதிகமாகப் பெற முடியும் எனப் பார்த்து அங்கு தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் மலையகக் கட்சிகளோடும் தேவைப்பட்டால் முஸ்லீம் கட்சிகளோடும் பேச்சுவார்த்தை நடாத்தி ஒரு இணக்கத்தின் அடிப்படையில் நாங்கள் அங்கும் போட்டியிடுவது தொடர்பில் ஆராய்ந்து எதிர்வரும் 3ம் திகதி இறுதி முடிவை அறிவிக்கவுள்ளதாக தெரிவித்தார்.