ஒருபோதும் தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்படமாட்டாது – சரத் வீரசேகர

Sarath Weerasekera
Sarath Weerasekera

தேசிய பாதுகாப்பை பலப்படுத்தாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. இதன் காரணமாகவே 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில் பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.

குறுகிய அரசியல் நோக்கத்திற்காக ஒருபோதும் தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்படமாட்டாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொது மக்கள் அச்சமில்லாமல் வாழ வேண்டும் என்பதற்காக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு ஸ்தாபிக்கப்பட்டது. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு சட்ட ஒழுங்கினை பாதுகாத்து ஒழுக்கமான சமுகத்தை தோற்றுவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பை பலப்படுத்தாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. இதன் காரணமாகவே அரசாங்கம் ஆரம்பத்திலிருந்து  தேசிய பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளது.

புலனாய்வு பிரிவு தேசிய பாதுகாப்பிற்கு பிரதான அம்சமாக காணப்படுகிறது.

பூகோள மட்டத்திலான நிகழ்வுகளை கருத்திற் கொண்டு 2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தில் பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கும் எதிர்தரப்பினர் மாறுப்பட்ட கருத்துக்களை குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். அரசியல் நோக்கத்திற்காக தேசிய பாதுகாப்பை ஒருபோதும் பலவீனப்படுத்தமாட்டோம்.

போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரம் தற்போது ஒப்பீட்டளவில் குறைவடைந்துள்ளது. கடல்மார்க்கமாக நாட்டுக்குள் உள்வரும் போதைப்பொருட்கள் பெருமளவில் கைப்பற்றப்படுவதனால் போதைப்பொருளுக்கான கேள்வி அதிகரித்துள்ளது.

முன்பு 8 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனையான ஒரு கிராம் ஹெரோயின் போதைப்பொருளின் விலை தற்போது 30 ஆயிரத்தையும் காட்டிலும் அதிகரித்துள்ளது.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை சிறையிலடைக்காமல் அவர்களுக்கு புனருத்தாபனம் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கட்டுள்ளன. போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றார்.