வட கிழக்கை, சிங்கள பௌத்தத்திற்குள் அடக்க முடியாது – விக்கி

viki
viki

வடக்கு கிழக்கில் தமிழர்களே பெரும்பான்மையினர் எனவும் வடக்கு கிழக்கை ‘சிங்கள பௌத்த’ அடைமொழிக்குள் கொண்டு வரமுடியாது. இதனை உணர்த்துவதற்காகவே தமிழ் மக்கள் சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர், தமிழ் மக்கள் செயலாளர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வாரம் ஒருமுறை நேயர்களின் கருத்திற்கு பதிலளித்து வருகிறார். இந்நிலையில் இவ்வாரத்திற்கான கேள்விக்கு பதில் அளிக்கையில்:

கேள்வி – நீங்கள் ஏன் இத்தருணத்தில், அதாவது புதிய ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் வேளையில் மற்றும் புதிய நாடாளுமன்றம் ஒன்று பரிணமிக்கப்போகும் வேளையில், சிங்களவர்கள் பற்றியும் பௌத்தம் பற்றியும் உங்கள் கருத்துக்களை வெளிப்படையாக வெளியிட்டு வருகின்றீர்கள்? தெற்கில் உங்கள் மீது பலத்த எதிர்ப்பு உருவாகி வருவதை நீங்கள் உணரவில்லையா?

பதில் –
“என்னிடம் தெற்கிலிருந்து ஆங்கிலத்தில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்தேன்.

அக் கேள்வியானது முஸ்லீம்களும் மலையகத் தமிழர்களும் மத்திய அரசாங்கங்களுடன் கைகோர்த்து முன்செல்ல உடன்படும் போது ஏன் வடகிழக்குத் தமிழர்கள் முரண்டு பிடிக்கின்றார்கள் என்றவாறு அமைந்திருந்தது.

என்னுடைய பதிலில் வடகிழக்குத் தமிழ் மக்களின் பாரம்பரியம் பற்றியும் தனித்துவம் பற்றியும் விளக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

அப்போதுதான் சிங்கள மக்கள் தம் பாரம்பரியம் பற்றிக் கொண்டிருக்கும் தவறான சிந்தனைகள் பற்றி கருத்துத் தெரிவிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டது.

பத்து வருடங்களுக்கு மேல் ஒரு சட்ட ஆசிரியராக இருந்த நான் கேள்விகள் கேட்கப்படும் போது அவற்றிற்கான தக்க பதில்கள் எவ்வகையான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று உய்த்துணர முடியாத நிலையில் இருக்கவில்லை.

குறித்த கேள்வி இந்த காலகட்டத்தில் வெளியே வர வேண்டிய சில விடயங்களை அம்பலப்படுத்த உதவியது. அந்தச் சந்தர்ப்பத்தை நான் நழுவவிடவில்லை.

இதுவரையில் தனித்து நாங்கள் எங்கள் மத்தியில் பேசிவந்த சில விடயங்களை நான் அம்பலப்படுத்தியுள்ளேன். நான் கண்ட உண்மையை வஞ்சகமில்லாமல் வெளிப்படுத்தியுள்ளேன். நான் வெளிப்படுத்திய உண்மைகள் நான் வாசித்தறிந்த விடயங்கள் மட்டுமல்ல பல சரித்திர ஆசிரியர்களுடனான கருத்துப் பரிமாற்றமும் அவ்வுண்மைகளை ஊர்ஜிதப்படுத்தியுள்ளன.

அவர்கள் சிலரிடம் ‘ஏன் இவற்றை வெளிப்படுத்த நீங்கள் முன்வரவில்லை?’ என்று கேட்டபோது ‘அது எப்படி சேர்?’ என்று மட்டும் பதில் இறுத்தார்கள்.

நாளை எனக்கொரு பக்க உதவி வேண்டுமென்ற நிலை வந்துவிட்டால் இவர்கள் ஒருவரேனும் என் சரித்திரம் பற்றிய கருத்துக்களை ஆதரிக்க முன்வருவார்களோ தெரியாது!

நான் செல்லும் பாதை ஆபத்தானது என்பது புரிகின்றது. பொதுவாக வடமாகாண பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் படித்த பல்துறை வல்லுநர்களிடமும் ஒரு தயக்கத்தை நான் அவதானித்துள்ளேன்.

தமது மனதுக்குச் சரியென்று பட்டதை அவர்கள் வெளியிடத் தயங்குவார்கள். தமக்குள் பேசிக்கொள்வார்கள். ஆனால் பிற இனத்தார் முன்னிலையில் அவற்றை வெளிப்படுத்த மாட்டார்கள். இது முப்பது வருடகால யுத்தத்தின் பாதிப்பாக இருக்கலாம்.

எமது கருத்துக்களை, எமது உணர்வுகளைக் கட்டுப்படுத்தி நாம் பல விடயங்களைப் பகிரங்கமாகப் பேசத் தயங்குகின்றோம் என்றே நான் காண்கின்றேன்.

இவ்வாறான சூழல் என்னைப் போன்றவர்களைப் பாதிக்காததாலோ என்னவோ என் கருத்துக்களை வெளிப்படையாகக் கூறக்கூடியதாக உள்ளது. அன்றுந் தான் இன்றுந் தான் எனக்கு உண்மை என்பது முக்கியமானது.

நீதிபதியாக பல வருடகாலம் கழித்ததாலோ என்னவோ ‘எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய் பொருள் காண்பதறிவு’ என்ற வள்ளுவர் வாக்கியம் மனதில் ஆழப் பதிந்துள்ளது.

ஒரு பக்கம் எனது வயது எனக்கு ஒரு பக்க பலமாக இருக்கின்றது. மறுபக்கம் என் இறை நம்பிக்கை இன்னொரு பக்க பலமாக இருக்கின்றது. கொழும்புத் தமிழர் ஒருவர் நான் மலிவான ஜனரஞ்சகத்தைப் பெற இவ்வாறு கூறியதாக தனது கருத்தை வெளியிட்டுள்ளார் என்று அறிகின்றேன்.

மேலும் இனக் கலவரம் ஒன்று வெடிக்குமோ என்ற கவலை அவருக்கு! சிங்கள மக்களின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கும் நான் கொழும்பில் பிறந்து வளர்ந்தவன்.

அங்கு சென்று வரவேண்டியவன். எனது குடும்பத்தாரும் ஆதனங்களும் அங்கு தான் உண்டு. என் வாழ்க்கையையும் எனது பாதுகாப்பையும் மட்டும் நான் நினைத்திருந்தால் இவ்வாறான கருத்துக்களை என்னுள்ளேயே பூட்டி வைத்திருப்பேன். மலிவான ஜனரஞ்சகத்திற்காக என்னையே நான் தியாகம் செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை.

ஆனால் இவற்றை எல்லாம் தெரிந்தும் எனது கருத்துக்களை வெளிப்படையாக வெளிக் கொண்டு வந்ததற்குக் காரணம் உண்டு. அது தான் நீங்கள் கூறிய காரணங்கள்.

ஒன்று புதிய ஜனாதிபதி. மற்றொன்று வரப்போகும் புதிய பாராளுமன்றம். சென்ற ஜனாதிபதித் தேர்தல் ஒரு விடயத்தைப் ‘பளிச்’ செனத் தெரியப்படுத்தியுள்ளது.

நாடு கருத்துக்களின் அடிப்படையில் துருவமயப் படுத்தப்பட்டுள்ளமை தெரிகின்றது. சிங்கள மக்களின் சிந்தனைகள் வேறு தமிழ் மக்களின் கருத்துக்கள் வேறு என்பது புலப்பட்டுள்ளது.

புதிய ஜனாதிபதி அவர்கள் சிங்கள பௌத்தத்தை நிலை நிறுத்த முன்வந்துள்ளார். அதற்கு சிங்களப் பொதுமக்கள் பெருவாரியாக வாக்களித்துள்ளார்கள். அந்த அடிப்படையில் வட கிழக்கு மாகாணங்களில் பௌத்த கோயில்கள், விகாரைகள், சின்னங்கள் யாவும் விரைவில் நிமிர்ந்தெழ இருக்கின்றன.

சரித்திரம் தெரியாத விஞ்ஞான அறிவு படைத்த சிலர் ‘இது ஒரு பௌத்த நாடு’ என்றும் ‘பௌத்தத்திற்கு முதலிடம் கொடுப்பதில் தமிழர்களுக்கு ஆட்சேபனை இல்லை’ என்றும் கூறியுள்ளார்கள். இது எந்த அளவுக்கு எம்மைப் பாதிக்கப் போகின்றதென்று அவர்கள்
சிந்தித்தார்களோ தெரியாது.

பௌத்த சின்னங்களை வடகிழக்கில் நிறுவ சுமார் 500 கோடி (சரியான தொகை எனக்கு நினைவில்லை) பாதீட்டில் ஒதுக்கிய போது எமது தமிழ்த் தலைவர்கள் அது பற்றித் தெரிந்தும் வாழாதிருந்தனர். காரணம் அவர்களுக்கு 300 கோடி தரப்போவதாக அப்போதைய பிரதம மந்திரி அறிவித்திருந்தார்.

இது தான் எமது பிரச்சனை. அரசாங்கங்களுடன் ‘சேர்ந்து போங்கள், சேர்ந்து போங்கள்’ என்று பலர் எமக்கு அறிவுரை தருகின்றார்கள். சேர்ந்து போனால் அவர்கள் எம்மை வாங்கிவிடுவார்கள் என்பதை இவர்கள் உணர்வதில்லை. 300 கோடி கிடைக்கின்றதென்று அறிந்தவுடன் எம் தலைவர்கள் வாய்பேசா மடந்தையர் ஆகிவிட்டார்கள்.

தற்போது வடகிழக்கில் புத்த சமய சின்னங்கள் விரைவாக வந்து கொண்டிருக்கின்றன. அவற்றைத் தடுக்க முடியாமல் இருக்கின்றார்கள் எங்கள் தமிழ்த் தலைவர்கள் என்று கூறப்படுபவர்கள் பொருளாதார விருத்தி என்று அரசாங்கம் கூறும் போதும் நாங்கள் ஒன்றை மனதில் வைத்திருக்க வேண்டும்.

உங்களுக்கு ஆலைகளைத் தந்து ஆதாயங்களை சுருட்டி விடும். இப்பொழுதே எமது வளங்கள் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எம்மால் தடுக்க முடியாமல் இருக்கின்றோம். இராணுவத்தை வைத்துக் கொண்டு பொருளாதார விருத்தி செய்தால் என்ன நடக்கும் என்று எம்மவர் சிந்திக்கின்றார்கள் இல்லை.

இன்றைய ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் இராணுவத்தினர் அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகள் ஆகிவிட்டார்கள். இனி அரசாங்கம் செய்யவிருப்பதை மக்கள் தடுப்பார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு சூழலில்த்தான் நான் இந் நாட்டின் சரித்திரம் பற்றிய உண்மைகளை வெளிக்கொண்டு வர அவசியம் ஏற்பட்டது.

சிங்கள பௌத்தர்கள் பலருக்கு முக்கியமாக பௌத்த பிக்குகளில் பலருக்கு உண்மை வரலாறு தெரியும். ஆனால் அவற்றை வெளிவரவிடாது இதுவரை சிங்கள மக்களை அறியாமையில் உழலவைத்து உசுப்பேத்தி வந்துள்ளார்கள் அவர்கள்.

அண்மையில் மேர்வின் சில்வா ஆடிய கைமுனு வாளாட்டம் நினைவிருக்கலாம். தமிழ் மக்களை வெளியேற்றி இந்த நாடு சிங்கள பௌத்த நாடு என்று பிரகடனப்படுத்த அவர்கள் காத்திருக்கின்றார்கள். குறுகிய நலன்கருதி எம்மவரும் ‘இது சிங்கள பௌத்த நாடு’ என்றே கூறத்தலைப்பட்டுள்ளனர்.

வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் இரஞ்சித் ஆண்டகை அடிப்படை தெரியாது அரற்றுகின்றாரா அல்லது அடி வாங்கப் பயப்பட்டு ‘இது ஒரு பௌத்த நாடு’ என்கிறாரா தெரியவில்லை. ஆனால் உண்மை அதுவன்று. வடக்கு கிழக்கு தவிர்ந்த பகுதிகளை வேண்டுமானால் சிங்கள பௌத்த நாடு என்று கூறலாம்.

வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் பேசும் மக்களே பெரும்பான்மையினர். அவர்கள் என்றென்றும் வடக்கு கிழக்கில் பெரும்பான்மையினராக இருந்து வந்துள்ளனர். எம்மக்கள் கிறிஸ்தவம், இஸ்லாம், சைவம் போன்ற மதங்களையே சார்ந்தவர்கள். பௌத்தத்திற்குச் சென்ற எமது ஆதித் தமிழ் மக்கள் கூட பௌத்தம் வேண்டாம் என்று திரும்பவும் சைவர்கள் ஆகிவிட்டார்கள்.

ஆகவே வடக்கு கிழக்கை ‘சிங்கள பௌத்த’ அடைமொழிக்குள் கொண்டு வரமுடியாது. இதை உணர்த்தவே நான் உண்மைகளை வெளியே கொண்டு வருகின்றேன்.

1956 இல் வடக்கையும் கிழக்கையும் இணைத்து ஒரே மொழியைத் திணித்தனர். இப்போது வடகிழக்கிலும் பௌத்தத்தைத் திணிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே இவ்விடயம் ஊர் அறிய வேண்டும். உலகம் அறிய வேண்டும். முக்கியமாக எமது மக்கட் தலைவர்கள் அறிய வேண்டும்.

நான் நாளை மறைந்துவிட்டாலும் நான் தொடக்கியுள்ள கருத்துப் பரிமாற்றம் கட்டாயமாக சிங்கள மக்களை சிந்திக்கச் செய்யும்.

இப்பொழுதே பல சிங்கள இளஞ்சமுதாயத் தம்பிமார்கள் உண்மையைத் தேடத் தொடங்கிவிட்டார்கள்.

ஆகவே தெற்கில் என்மீது பரவலான எதிர்ப்பு எழுந்துள்ளதை அறிவேன். உண்மை கசக்கும் என்பதற்கு அது எடுத்துக்காட்டு” என தெரிவித்தார்.