இந்திய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்களுடன் டக்ளஸ் சந்திப்பு!

received 405202417940682
received 405202417940682

நேற்று (04) மாலை முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் கனடா செல்வதற்காக நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தங்கியிருந்தபோது  இந்தியாவில் இந்திய காவல்த்துறையினரால் பிடிபட்டு இந்தியாவின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்களுக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. குறித்த சந்திப்பானது நேற்று(04) மாலை முல்லைத்தீவு மாவட்ட  கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாச கட்டிடத்தில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் இந்தியாவில் இந்திய காவல்த்துறையினரால்  பிடிபட்டு இந்தியாவின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் உறவினர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்தனர்.  

முல்லைத்தீவு மற்றும் ஏனைய வடக்கு கிழக்கு பகுதிகளிலிருந்தும் கனடா செல்வதற்காக முகவர் ஊடாக இரண்டு பிரிவுகளாக இந்தியா சென்று  அங்கு தங்கியிருந்த நிலையில் இந்தியாவின் கர்நாடகாவில் இருந்து இலங்கை தமிழர்கள் சட்டவிரோதமாக கனடாவுக்கு செல்லவந்தவர்க்காக வருகை தந்திருப்பதாக அம்மாநில காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில் கர்நாடக காவல்துறையினர், மங்களூரில் சட்டவிரோதமாக தங்கி இருந்த 38 பேரை கைது செய்ததோடு தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை தமிழர்கள் 23 பேரை தமிழ்நாட்டு காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் கடந்த 10.06.2021 அன்று கைது செய்யப்பட்டிருந்தனர்.

தமிழ் நாட்டில் கைது செய்யப்பட்ட 23 பேரை தமிழ்நாட்டு காவல்துறையினர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டு தற்போது திருச்சி சிறப்பு முகாமில் உள்ளனர். இதேவேளை மங்களூரில் சட்டவிரோதமாக தங்கி இருந்து கைது செய்த 38 பேரை கர்நாடக காவல்துறையினர் மங்களூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவர்கள் 38 பேரும் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இரண்டு சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ளவர்களில் முல்லைத்தீவை சேர்ந்த 42 பேரையும் விடுவித்து தருமாறு  அவர்களின் உறவினர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கண்ணீருடன் கோரிக்கை விடுத்திருந்தனர்.