திடீர் அனர்த்த நிலைமைக்கு முகங்கொடுக்க முப்படை உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தயார் நிலையில்!

download 13
download 13

நாட்டில் ஏற்படக்கூடிய எந்தவொரு அனர்த்த நிலைமையையும் எதிர்கொள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையம், முப்படையினர் மற்றும் காவல்துறையினர் தயாராக இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்குத் தேவையான அனைத்து முன் ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று (08) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அனர்த்தம் தொடர்பில் மக்களுக்கு அறிவிக்கப்பட்டவுடன் அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது நிலவும் வானிலை காரணமாக காடுகளுக்கு சுற்றுலாப் பயணம் செல்லுதல், மலையேறுதல், ஆற்றில் நீராடுதல், படகு சவாரி செய்தல் போன்ற செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றாமல், சட்டவிரோதமான பயணங்களை மேற்கொண்டு மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அனர்த்த நிலைமை மற்றும் கொவிட் பரவலைக் கருத்திற் கொண்டு தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் 9 நிவாரண நிலையங்களில் 63 குடும்பங்களைச் சேர்ந்த 251 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்குத் தேவையான அனைத்து நிவாரணங்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.